Friday, August 23, 2024

பொதுக்காலம் 21-ம் - ஞாயிறு மறையுரை -25.08.2024.

 👉 இறைச் சிந்தனை 

தேனருவி மீடியா

பொதுக்காலம் 21-ம் ஞாயிறு

25.08.2024

யோசுவா 24: 1 - 2, 15 - 17, 18, 

எபேசியர் 5 : 21 - 32,

யோவான் 6: 60 - 69.

அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.


பிரமாணிக்க முள்ள வாழ்வும், பணியும்

நிகழ்வு

ஒரு சில ஆண்டுகளுக்கு முன் கேரளாவின் முக்கிய நாளிதளாகிய "மலையாள மனோரமா" - வில் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியாகிய, ஜான் F. கென்னடி குடும்பம் பற்றிய ஒரு செய்தி வந்தது. கென்னடியின் தாய் ரோஸ் கென்னடி கொடுத்த ஒரு பேட்டி அது.

தாய் ரோஸின் நேசத்திற்குரிய மகன் ஜான் F. கென்னடி சுட்டுக் கொல்லப்பட்டார். மற்றொரு மகன் தேர்தல் பிரச்சாரத்தின் போது சுட்டுக் கொல்லப்பட்டார். மூன்றாவது மகன் விமான விபத்தில் பலியானார். நான்காவது மகன் எதிர்பாராத விதமாக மரணமடைந்தார். திருமதி ரோஸ் - யிடம் இந்த இழப்புகளை எப்படி பார்க்கிறீர்கள்? என்று கேட்டபோது, அந்தத் தாய் "இவ்வளவு வேதனை நிறைந்த கடந்த காலத்தில் என்னுடைய கிறிஸ்தவ விசுவாசத்தைக் காப்பாற்றிய கருணை நிறைந்த இறைவன், இனி வரவிருக்கும் காலத்திலும் நான் எனது விசுவாசத்தை இழந்து விடாமல் பிரமாணிக்கத்தோடு வாழ இறைவன் துணை புரிவார்” என்றுக் கூறினார்.

இங்கு இறைவாக்கினர் அபகூக்கின் வார்த்தைகளை நாம் நினைவு கூா்வது நல்லது. அபகூக் 3:17 "அத்தி மரம் துளிர்த்து அரும்பாமல் போயினும், திராட்சைக் கொடிகள் கனி தராவிடினும், ஒலிவ மரங்கள் பயனற்றுப் போயினும், வயல்களில் தானியம் விளையாவிடினும், கிடையில் ஆடுகள் யாவும் அழிந்து போயினும் அபகூக் 3:18 "நான் ஆண்டவரில் களிகூர்வேன். என் மீட்பரான கடவுளில் மகிழ்ச்சியுறுகின்றேன்" என்ற அபகூக்கின் பிரமாணிக்கத்தை போல், இறையூழியன் யோசுவா தன்னை ஆண்டவரில் உறுதிப்படுத்தினார் என்பதை இன்றைய முதல் வாசகம் எடுத்துக் கூறுகிறது.

ஏன் உண்மை கடவுளை வழிபட வேண்டும்

🟣இந்தக் கடவுளே அடிமை வீடாகிய எகிப்திலிருந்து வாழ்வின் நாட்டிற்கு அழைத்து வந்தவர்.

🔵இவரே விடுதலைப் பயண வாழ்வில் செங்கடலைப் பிளந்து வழியமைத்தவர்.

🔴இவரே பாறையிலிருந்து பருக நீர் கொடுத்தவர்.

🟢இவரே மன்னாவால் உண்பித்தார்.

🟡இவரே எரிக்கோ மதிலை உடைத்தார்.

🟣இந்தக் கடவுள் தூயவர், ஆற்றல் மிக்கவர், தனி உரிமை பாராட்டுபவர்.

எசே  11:20 "அவர்கள் என் மக்களாய் இருப்பார்கள், நான் அவர்கள் கடவுளாய் இருப்பேன்" என்று உரிமை பாராட்டுகிறவர்.

🔵இந்தக் கடவுள் மீட்பர், இருக்கிறவராக இருந்து வழி நடத்துகிறவர், பாதுகாப்பு அருள்கிறவர், எதிரிகளை அழித்து வெற்றி வழங்குபவர்.

🔴கடவுள் (யாவே) ஈடு இணையற்றவர், மக்களின் வலிகளை உணர்ந்து விடுதலை தருகிறவர்.

🟣தன்னிகரில்லாதவர், இஸ்ரயேலர் வரலாற்றில் முன் நின்று கை கொடுத்தவர். ஆகவே முழு இதயத்தோடும், முழு ஆற்றலோடும், முழு ஆன்மாவோடும் அவரை வழிபட வேண்டும் என்று விரும்பினார்.

ஆனால் இஸ்ரயேலர் ஆண்டவர் எந்த அளவிற்கு அவர்கள் தம்முடன் இருக்க வேண்டும் என்று விரும்பினாரோ அந்த அளவிற்கு இறைவனைப் புறக்கணித்தனர்.

ஒசே 11:2 "எவ்வளவுக்கு நான் அவர்களை வருந்தி அழைத்தேனோ, அவ்வளவுக்கு என்னை விட்டுப் பிடிவாதமாய் விலகிப் போனார்கள்" என்று இறைவாக்கினா் ஒசேயா கூறுகிறார்.

🟡இஸ்ரயேலரின் பிரமாணிக்கமின்மையைக் கூறும் போது

எரே 2:13 "என் மக்கள் இரண்டு தீச்செயல்களைச் செய்தார்கள். பொங்கி வழிந்தோடும் நீரூற்றாகி என்னைப் புறக்கணித்தார்கள். தண்ணீர் தேங்காத உடைந்த குட்டைகளைத் தங்களுக்கென்று குடைந்து கொண்டார்கள்" என்று எரேமியா சுட்டிக்காட்டுகிறார்.

🟢பொங்கி வழிந்தோடும் நீரூற்று என்று, இஸ்ரயேலரின் வாழ்வு தரும் கடவுள், இருக்கின்றவராக இருக்கின்றவர். நாமே உன்னை நலமாக்கும் கடவுள் என்றவரும், நெருக்கடி வேளையில் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்கின்ற யாவே கடவுள் துன்பத்தில் உன்னை காண்கின்றவருமாய் இருந்து வழி நடத்திய "லாகாய்ரோயி" என்ற இந்த கடவுளை மறந்தனர்.

🔵தண்ணீர் தேங்காத உடைந்த குட்டை, வேற்றின தெய்வங்கள். வாழ்வு தர இயலாதவற்றை கடவுளாக நம்பி வணங்கினர். ஆனால் ஆண்டவர் சினம் கொண்டார். இறைவாக்கினர், தம் ஊழியர் வழியாக எச்சரித்தார்.

இச 5:9 "நீ அவைகளை வழிபடவோ, அவற்றிற்குப் பணிவிடை புரியவோ வேண்டாம். ஏனெனில் நானே உன் கடவுளாகிய ஆண்டவர். வேற்றுத் தெய்வ வழிபாட்டைச் சகிக்காத இறைவன். என்னை வெறுக்கும் மூதாதையரின் தீச்செயலுக்காக மூன்றாம், நான்காம் தலைமுறை மட்டும் பிள்ளைகளைத் தண்டிப்பவர்" என்றார். இத்தகைய வேற்று தெய்வ வழிபாடு நடைபெற்றக் காலத்தில் தான் யோசுவா,  தம் மக்களை வழிபாடுகள் நடத்தி தமது பற்றுறுதியை, நம்பிக்கையை வெளிப்படுத்தும் படி அடிக்கடி அவர்களை விசுவாசத்தில் உறுதிப்படுத்த சாட்சிய வாழ்வு வாழ வேண்டியிருந்தது.

🟣 "சிக்கேம்" உடன்படிக்கை என்று அழைக்கப்படும் இவ்வழிபாட்டுக் கூட்டத்தில் தான் யோசுவா கூறினார். யோசுவா 24:15 "....நானும் என் வீட்டாரும் ஆண்டவருக்கே ஊழியம் செய்வோம்" என்று பிரமாணிக்கத்தோடு, உறுதியோடு சான்று பகர்த்தார். இதனால் மன உறுதியும், தெளிவும், யாவே மீது நம்பிக்கையும் பெற்ற மக்கள் யோசுவா 24:18 "ஆண்டவர் எல்லா மக்களையும் இந்நாட்டில் வாழ்ந்த எமோரியரையும், எங்கள் முன்னிருந்து விரட்டினார். நாங்களும் ஆண்டவருக்கு ஊழியம் புரிவோம் ஏனெனில் அவரே எங்கள் கடவுள்" என்றனர்.

இவ்வாறு வழி தவறிய மந்தையை, பிரமாணிக்க முள்ள மக்களாக யோசுவா மாற்றினார்.

🔴இன்றைய நற்செய்தியில், தாய் தன் குழந்தையின் தேவையை மனநிலையை அறிந்து உணவு ஊட்டுவது போல் இறைமகன் இயேசு தம் போதனையை வழங்கினார்.

🟣அவரின் போதனைகளைக் கேட்டு வியந்தவர்கள் உண்டு, மலைத்துப் போனவர்கள் உண்டு.

🔵இவர் அதிகாரத்தோடு போதிக்கிறார் என்று போற்றிப் புகழ்ந்தவர் உண்டு.

🟢என்னே! இவர் கைகளாலாகும் அருஞ்செயல்கள் என்று ஆச்சரியப்பட்டவர்கள் உண்டு. ஆனால்

🟡வாழ்வு தரும் உணவு நானே (யோ 6:48)

🔴விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே       (யோ 6:51)

🔵எனது சதையை உண்டு என் இரத்தத்தை குடிப்போர் நிலை வாழ்வை கொண்டுள்ளார் (யோ 6:54) என்று வாழ்வு வழங்கும் கிறிஸ்து தன்னை வாழ்வின் அடையாளமாய் அடையாளப்படுத்திய போது

🟣இவன் எப்படி நாம் உண்ண தன் சதையை வழங்க முடியும் என்று வாக்குவாதம் செய்தனர்.

🔴இந்தப் பேச்சு மிதமிஞ்சிப் போகிறது என்று முணுமுணுத்தனர்.

🟢இவரது பேச்சை, ஏற்க இயலாது என்று பலர் அவரிடமிருந்து விலகிச் சென்றனர். இந்தச் சூழலில் இயேசு பன்னிரு சீடரிடம் நீங்களும் போய் விட போகிறீர்களா? என்றபோது சீமோன் பேதுரு யோவான் 6:68 "ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம் நிலை வாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம் தானே உள்ளன" என்று தன் ஆழமான இறையனுபவத்தை உறுதி செய்ததைப் பார்க்கின்றோம். தன் தலைவன் இயேசுவுக்கு பிரமாணிக்கமுள்ள ஊழியராக, சீடராக எண்பித்தார் பேதுரு.

நாம் நம் வாழ்வை ஆய்வு செய்வோம்

🟡குடும்ப உறவுகள் பிரமாணிக்கத்தோடு அமைகிறதா?

🔵பிள்ளைகள் (ஆண், பெண்) பெற்றோருக்கு பிரமாணிக்கமுள்ள வாழ்வு வாழ்கிறார்களா?

🟣என்னிடம் நம்பிக்கை உண்டு என்றால் அதை நாம் நம் செயல்களால் காண்பிக்க வேண்டும்.

🔴துன்பம், நோய், நெருக்கடிகள் வரும்போது நம் மனநிலை என்ன?

🟢தொழில் நஷ்டம், கடினப்பட்டு உழைத்து முன்னேற முடியாத போது பில்லி சூனியம், பிற தெய்வங்களை நாடிச் செல்கிறோமா?

🟡அரசு  பணிகள், பொறுப்புகளில் இருப்போர் இலஞ்ச இலாவண்யங்களை தவிர்த்து உண்மையோடும், நீதியோடும் வாழ்கிறோமா?

🟣நம் பிரமாணிக்கமுள்ள, நம்பிக்கையுள்ள வாழ்வும், பணியும், கடவுளின் பிள்ளைகள் என்பதை உலகிற்கு எடுத்துரைக்கட்டும்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.

👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋

தேனருவி மீடியா

http://youtube.com/c/thenaruvimedia

Subscribe பண்ணுங்க.*

No comments:

Post a Comment