Saturday, August 31, 2024

பொதுக்காலம் 22-ம் - ஞாயிறு மறையுரை -01.09.2024.

 👉 இறைச் சிந்தனை 

தேனருவி மீடியா

பொதுக்காலம் 22-ம் ஞாயிறு

01.09.2024

இனைச்சட்டம் 4: 1 - 2, 6 - 8, 

யாக்கோபு 1 : 17 - 18, 21-22, 27,

மாற்கு 7: 1 - 8, 14- 15, 21-23.

அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.

வெளிவேடம் களைவோம்

🟣காலம் கடந்து போன மூதாதையர் மரபுகளை இன்னும் வலிந்து பிடித்துக் கொண்டிருந்த பரிசேயர்களின் அடிப்படைவாதம், வெளிவேடமான வாழ்வை இயேசு வெளிப்படையாய் வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறார்.

🟡இந்த காலவதியாகும் யூத மரபுகளின் பயனற்றத் தன்மையையும் இறைவார்த்தைக்கு எதிரான செயல்பாடுகளையும் இயேசு மிகவும் வன்மையாக கண்டிக்கின்றார்.

மாற்கு 7:9 "உங்கள் மரபை நிலைநாட்டக் கடவுளின் கட்டளைகளை வெகுத் திறமையாக புறக்கணித்து விட்டீர்கள்" என்ற இயேசுவின் குற்றச்சாட்டு, யூதர் மற்றும் யூதமரபுகளின் சுயநலத்தை வெளிப்படுத்துகின்றது.

🟢இவ்வேளையில் இயேசு அன்பு, பரிவு, மனித நேயம், இரக்கம் போன்ற உயர்வான மதிப்பீடுகளைச் செயல்படுத்தி தமது இறையாட்சிப்பணியைத் திறம்பட செய்து கொண்டிருந்தார்.

🔴இவ்வேளையில் பரிசேயரும், மறைநூல் அறிஞரும் அவரிடம் வந்து சீடரின் செயல்பாடுகளையும், யூத மரபுகளையும் எடுத்துக் கூறி, குற்றம் சுமத்துவதை நற்செய்தி சுற்றுகிறது.

🔵ஆண்டவர் இயேசு வெளிப்புறத்தில் தூய்மையை விரும்பும் மக்களின் உள்ளத்தில் நிறைந்துள்ள தீமைகளையும், வெளிவேடங்களையும் களைந்து உண்மையுடன் வாழ அழைக்கின்றார்.

நிகழ்வு - 1

26.04.1998 தேதியிட்ட தமிழ் வார இதழில் வந்த செய்தி, 15.04.1998 அன்று கம்போடியாவின் சர்வாதிகாரி போல்பாட் இதய நோயால் இறந்து போனான் என்ற செய்தி. இச்செய்தியை கேட்டதும் மக்களின் மனங்களில் எதிரொலித்த கேள்வி போல்பாட்டிற்கு இதயம் இருந்ததா? என்பதுதான்.


போல்பாட் - என்றால் சிறந்த நண்பன் என்று பொருள். இவர் ஆறு வருடம் புத்தமடத்தில் பயின்று, இரண்டு ஆண்டுகள் புத்த துறவியாக வாழ்ந்தவர். பின் அங்கிருந்து வெளியேறி உழவுத்தொழில், எலக்ட்ரிக்கல் தொழில் செய்து வந்தார். 1975 ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சி வழி பதவி பெற்றார். இப்போது தன் இயற்பெயரான "சயோத்சார்" என்று பெயரை போல்பாட் என்று மாற்றிக் கொண்டார்.

சிறந்த நண்பனாக தன்னை அறிமுகப்படுத்திய போல்பாட் தன் கைகளால் அடித்துக் கொன்ற மக்களின் எண்ணிக்கை 20 இலட்சம், இந்த மண்டை ஓடுகளை ஒரு காட்சியகத்தில் வைத்து பார்த்து ரசிப்பது போல்பாட்டின் வழக்கம். எனவே தான் மக்களின் மனங்கள் போல்பாட்டிற்கு  இதயம் இருந்ததா?  என்று கேள்விகளை உதிர்த்தது. மக்களின் சிறந்த நண்பன் என்று வெளிவேடமாய் சொல்லிக்கொண்டே இத்தனை இலட்சம் மக்களைக் கொன்று குவித்த மனித அரக்கன் அவன்.

ஐக்கிய நாட்டு சபை முன்னாள் தலைமைச் செயலர்  "கர்ட் லாஸ்ட்ஹோம்" இவ்வாறு சொன்னார். "உலக வரலாற்றில் கம்போடிய மக்களின் வேதனைகளையும், கொடுமைகளைப் போல் வேறு எந்த இனமும் அனுபவித்திருக்க இயலாது" என்று இத்தகைய வெளிவேட, போலியான வாழ்வைத் துறந்து எதார்த்த எளிய, தூய வாழ்வை வாழ்வாக்க அழைக்கிறது வழிபாடு.

இன்றைய முதல்வாசகம், மோயீசன் கடவுளின் சட்டங்களை மக்களுக்கு அறிவிக்கும் முன் மக்களுக்கு கூறிய அறிவுரையாகும்.  ஒவ்வொரு கட்டளையும் இறைவனே நமக்கு அருளுகின்றார். ஒவ்வொரு கட்டளையும் இறை ஞானத்தை நமக்கு வெளிப்படுத்துகிறது. இறைச் சட்டங்களுக்கு பணிந்து நடந்தால் நம் வாழ்வு வளம் பெறும் என்பதை உணர்த்துகிறது.

🔵கனிகளைக் கொண்டே மரத்தை மதிப்பிடுகின்றோம். அது போல நமது செயல்களே நாம் யார் என்பதை உலகிற்கு காட்டும். 

🔴கடவுளின் உரிமைச்சொத்து என்று தங்களை உயர்வாக சொல்லிக் கொள்ளும் இஸ்ரயேலர், கடவுளின் கட்டளைகளைக் கடைபிடித்தால் தான் சிறந்த மக்களினமாக பிற மக்களால் பாராட்டப்படுவர்.

🟢யாவே கடவுளுக்கும், இஸ்ரயேல் மக்களுக்குமான உறவு மிகவும் நெருக்கமானது, ஆழமானது. இதனை இன்றைய முதல் வாசகம் வழி அறிகின்றோம்.

இச 4:7 "நாம் குரல் எழுப்பும் போதெல்லாம் நம் கடவுளாகிய ஆண்டவர் நம்மோடு உள்ளார். அவரைப் போல் மக்களுக்கு மிகவும் நெருங்கிய கடவுளைக் கொண்ட வேறு பேரினம் ஏதாகிலும் உண்டா" என்ற இறைவார்த்தை வழி யாவே கடவுளுக்கும், மக்களுக்குமான உறவை அறிய வருகின்றோம்.

🟡நாம் கடவுளுக்கு அஞ்சி, அவர் வழியில் நேரிய உள்ளத்தோடு நடந்தால் தீமையிலிருந்து விடுவிக்கப்படுவோம். இல்லையேல் தீமையில் அகப்பட்டு துன்புறுவோம் என்பதை  நீமொழி 11:8 "கடவுளுக்கு அஞ்சி நடப்போர் துயரினின்று விடுவிக்கப்படுவர். பொல்லார் அதில் அகப்பட்டு உழல்வர்" எனவே நாம் ஒளியின் நெறியில் நற்கனிகள் வழங்க அழைக்கப்படுகின்றோம்.

🟣சட்டம், சம்பிராதயம், சடங்கு, மரபு என பழமை வாதம் பேசுவோர் சமூக, சமய, தேச நலனுக்காக அதை கடைபிடிப்பதில்லை.

🔵எல்லா செயல்களிலும் சுயநலமே மிஞ்சி நிற்கிறது. சுயபுகழே ஆணி வேராகி நிற்கிறது.

யாக் 1:17 "நல்ல கொடைகள் அனைத்தும், நிறைவான வரமெல்லாம் ஒளியின் பிறப்பிடமான விண்ணகத் தந்தையிடமிருந்தே வருகின்றன" இதை உணர்ந்ததில்லை.

🔴 பரிசேயர், மறைநூல் அறிஞர், மூப்பர்கள், மரபுச் சட்டங்களை முன்னிலைப்படுத்திய போது இறைவாக்கினர் எசாயா

எசாயா 29:13 "வாய் சொல்லால் இம்மக்கள் என்னை அணுகுகிறார்கள் உதட்டினால் என்னை போற்றுகின்றனர் ஆனால் அவர்கள் உள்ளமோ என்னை விட்டு தொலைவில் இருக்கிறது" என்று இயம்புகிறார்.

🟢கடவுள் நமக்கு அருளிய கட்டளைகள், மனிதத்தை, மனித மாண்பை, ஞானத்தை, அறிவாற்றலை மையப்படுத்தியது. எனவே போலியான, வெளிவேடமான, மரபு, சடங்கு, சட்டங்களைக் கடந்து செயலாற்ற அழைப்பு விடுக்கிறது இன்றைய வழிபாடு.

இன்றைய நற்செய்தியில், கழுவாத கைகளால் உண்ட சீடர்களின் செயல் சட்டம், மரபை மீறிய செயல் என்று பரிசேயர், மறைநூல் அறிஞர் முறையிட்டனர், இயேசுவிடம் வாதிட்டனர். ஆண்டவர் மோசேயிடம் அறிவுறுத்தியபோது விப. 30:20"சந்திப்புக் கூடாரத்தில் நுழையும் போது அல்லது பலிப்பீடத்தை நெருங்கி ஆண்டவருக்கு நெருப்புப் பலிகளைச் சுட்டெரிக்கும் பணிபுரியும் போது அவர்கள் தண்ணீரால் கழுவிக்கொள்வார்கள்" என்றும் மக்கள் உணவு உண்ணும் முன்பும் கை கழுவ வேண்டும் என்று அறிவுறுத்துவார்.

🟡உணவு நேரடியாக மனித உள்ளத்தை, ஆன்மீகத் தூய்மையை சிறிதேனும் பாதிப்பதில்லை.

🟣உள்ளமே நன்மைக்கும் தீமைக்கும் ஊற்று.

🟣போட்டி, வஞ்சகம், கொலை, களவு, விபச்சாரம், பேராசை போன்ற தீய செயல்களும் ஆணவம், பொய், புறணி, பொறாமை, பழிச்சொல் ஆகிய தீய பழக்கவழக்கங்களும் உள் மனதில் இருந்தே எழுகிறது (மாற்கு 7:21-22)

🔴ஒரு மனிதன் கை, கால்களைச் சுத்தம் செய்வதால், அல்லது உண்ணும் பாத்திரங்களைச் சுத்தம் செய்வதால் ஆள்மனதில் உள்ள தீமைகள், பாவங்கள் விலகிவிடுவதில்லை.

🔴வெளிப்புறத்தைத் தூய்மைப்படுத்துவதால் அகம், உள்ளம் தூய்மையடையாது.

🟢உள்ளங்கள் சுத்திகரிக்க, தூய்மையாக்கப்பட வேண்டும்.

🟢உள்ளத் தூய்மையைப் புறக்கணித்து, வெள்ளி ஆடம்பரச் செயல்களில் ஈடுபடுவதால் உள்ளம் தூய்மைப் பெற்று விட முடியாது. ஆகவே தான் ஆண்டவர் இயேசு மத் 23:28 "நீங்களும் வெளியே மக்களுக்கு நேர்மையாளராய் தோற்றமளிக்கிறீர்கள். ஆனால் உள்ளேயோ போலித்தனமும், நெறிக்கேடும் நிறைந்தவர்களாய் இருக்கிறீர்கள்" என்று

🔵வெளிவேடம் செய்பவர்களை கடுமையாக கண்டிக்கிறார். எனவே நாம் வெளிவேடம் களைந்து உண்மையான எதார்த்தமான நேரிய வழியில் கடவுளின் பிள்ளைகளாக வாழ முயல வழிபாடு அழைக்கிறது.

நம் வாழ்வை சீர்தூக்குவோம்

🟡ஆலயங்களுக்கு தவறாக செல்வதாலோ, மற்றவர் முன் நல்லவர் என்று பெயர் எடுப்பதாலோ நாம் இறைவனுக்கு ஏற்புடையவராக முடியாது.

🟡உள்ளத்தில் தூய்மை, சொல்லில் உண்மை, செயலில் நேர்மை உள்ளவரே இறைவனின் அருளை சொந்தமாக்குவார்.

மத் 5:8 "தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர் ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பார்"

🟡தூய உள்ளம் கடவுளை காணும் வழியாகும்.

🟡வெளி ஆசாரங்கள், சடங்குகளில் அதிக முன்னுரிமை வழங்குவதை விடுத்து, மனதில் மாசின்றி வாழ்தல் இறைவனுக்கு உகந்தது.

🔴இன்றைய வியாபார விளம்பர உலகில் பொய்யை மெய்யாக்கி இல்லாததை இருப்பதாக சொல்லி, தரமற்றதை தரமாகக் காட்டும் பித்தலாட்ட ஊடகங்கள் தங்கள் தர்மத்தை இழந்து செயல்படுகிறது.

🔴பொருள் மைய உலகில், மனித மாண்பு இழந்து விளம்பர சந்தையின் நுகர்வு பொருளாகின்றான் மனிதன்.

🔴விளம்பர பொய்க்குள் சிக்குண்டு எதார்த்த வாழ்வைத் தொலைத்து சல்லடையாய் நொறுங்கிப் போகின்றோம்.

எனவே தேவையற்ற ஆடம்பரங்களையும், வெளிவேடங்களையும் துறந்து நேரிய, உண்மையான, தூய வாழ்வு வாழ வரம் வேண்டுவோம்!

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.

👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋

தேனருவி மீடியா

http://youtube.com/c/thenaruvimedia

Subscribe பண்ணுங்க.*

No comments:

Post a Comment