Saturday, September 7, 2024

பொதுக்காலம் 23-ம் - ஞாயிறு மறையுரை -08.09.2024.

 👉 இறைச் சிந்தனை 

தேனருவி மீடியா

பொதுக்காலம் 23-ம் ஞாயிறு

08.09.2024

எசாயா 35: 4 - 7, 

யாக்கோபு 2 : 1 - 5,

மாற்கு 7: 31 - 37.

அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.


திறக்கப்படட்டும்

🔴மாற்றுத்திறனாளிகள் மேல் இறைவன் காட்டும் அக்கறையை இது சுட்டுகிறது.

🟡இயேசு பிற இனத்தார் வாழும் தீர், சீதோன் பகுதியில் இறையாட்சிப் பணியை முடித்துவிட்டு தெக்கபோலி வருகிறார். அங்கு காது கேளாத, திக்கி பேசும் ஒருவருக்கு வாழ்வு வழங்குகிறார்.

🔵பரிசேயர், சதுசேயர்கள் எதிர்ப்புகளை எல்லாம் தாண்டி தான் இயேசு அன்பு, பரிவு, மானுட நேயம், இரக்கம், மன்னிப்பு போன்ற இறையாட்சி மதிப்பீடுகளை வாழ்வாக்கினார். ஆயினும் இயேசு

திபா 10:38 "எங்கும் நன்மை செய்து கொண்டே சென்றார்"

♦️இயேசுவின் உள்ளம் நோயாளிகள், பாவிகள். உடல் ஊனமுற்றோர் ஆகியோரை மாண்புடனும், பரிவுடனும் நடத்துவதில் விழிப்பாய் இருந்தது.

♦️இறையாட்சிப் பணிச் செய்ய நடந்து சென்ற பகுதிகளில் நடக்க இயலாதோர், பேச முடியாதவர், பார்வையற்றோர், நோயற்றோர் ஏன் மரித்தவருக்குக் கூட புது வாழ்வு வழங்கி நலமுடன் வாழச் செய்தார்.

♦️இதன் இறைவன் வழியாக நமக்கு விடுக்கும் அழைப்பு யாதெனில் நம்முடைய இதயக் கதவுகள் திறக்கப்பட வேண்டும்.

♦️பிறரை அதிகாரத்தோடும், ஆணவத்தோடும், இழிவோடும், வெறுப்போடும் பார்க்கும் நம் விழிகளும், இதயமும் மூடப்பட்டு பாசத்தோடும், அன்போடும், பணிவோடும், கனிவோடும் பார்க்கக் கூடிய இதயங்கள் திறக்கப்பட வேண்டும்.

♦️அப்போது மகிழ்வும், சமாதானமும், நிறை வாழ்வும் குடிகொள்ளும் சமூகம் கட்டி எழுப்பப்படும்.

நிகழ்வு

மீரா புரூக்ஸ் என்பவர் எழுதிய "Touch of the Master's Hand" என்ற கவிதை நூலில், ஒரு சிறிய கதை ஒன்றை கவிதையாக வடிக்கிறார்.

தெருவோரத்தில் பழைய பொருட்களை ஒருவன் ஏலமிடுகின்றார். அப்போது தூசு படிந்த பழைய வயலின் ஒன்றும் அங்கே ஏலம் இடப்பட்டது. மற்ற பொருட்களை வாங்க முண்டியடித்து, போட்டிப் போட்டு வாங்கிய கூட்டம் இதைக் கண்டு கொள்ளவே இல்லை. கூட்டத்தினின்று வந்த முதியவர் ஒருவர் யாரும் வாங்காத அந்த வயலினை எடுத்தார். தன் கைக்குட்டையால் அதில் படிந்திருந்த தூசை தட்டினார். தளர்ந்து, குலைந்து கிடந்த நரம்புகளை இறுக்கிக் கட்டினார். பின்னர் அந்த வயலினை வாசிக்க தொடங்கினார். அழகிய, இதயத்தை உருகச் செய்யும் இசை எல்லாரின் செவிகளையும், இதயத்தையும் திறந்து, யாரும் வாங்க முன்வராத வயலினை வாங்க இப்போது போட்டிப் போட்டனர்.

ஒருவரின் கண்கள் திறக்கப்பட்ட போது அந்த வயலின் சிறப்பு பெற்றது.  அதனால் அதன் மதிப்பு உயர்ந்தது. இந்த நிகழ்வு நமக்குத் தரும் செய்தி இதுதான்.

1. எதையும், யாரையும் குறைத்து மதிப்பிடவோ, இழிவாக பார்க்கவோ வேண்டாம்.

2. நம் கண்களையும், இதயத்தையும் விசாலப்படுத்தி பார்க்கும்போது, பிறர் நம்மை விட மதிப்புக்குரியவர்கள், மாண்புக்குரியவர்கள் என்ற உண்மை புலப்படும்.

🟢தெக்கபோலியில் யாரும் கண்டுகொள்ளாத மனிதனை ஆண்டவர் கண்டார். எவருடைய இதயங்களும் திறக்கப்படாத போது, இயேசுவின் இதயம் பரிவிரக்கத்தால் திறந்தது.

லேவி 19:4 "காது கேளாதோரைச் சபிக்காதே, பார்வையற்றோரை இடறச் செய்யாதே, உன் கடவுளுக்கு அஞ்சி நட நான் ஆண்டவர்" என்ற இறைவாக்கிற்கு ஏற்ப நமது ஆண்டவர் இயேசு பாிவோடு செயல்பட்டு அந்த மனிதனின் காது, நாவை திறப்பதைப் பார்க்கின்றோம்.

பாபிலோனில் அடிமைகளாக வாழ்ந்த இஸ்ரயேல் மக்கள் துன்புற்றனர். நம்பிக்கையின் கதவு அவர்களில் அடைக்கப்பட்டது. இவ்வேளையில், ஒரு நாள் நாம் நம் சொந்த நாட்டில் குடியேறுவோம், இந்த அவலமான அடிமை வாழ்வு தகர்க்கப்படும், விடுதலையின் மக்களாய் வாழ்வோம் என்ற நம்பிக்கையின் கதவை இறைவாக்கினர் எசாயா வழியாக ஆண்டவர் திறந்தார்.

எசேக்கியல் 11:20 "என் நீதி நெறிகளுக்கு செவி கொடுத்து அவற்றை கடைபிடிப்பார்கள் அவர்கள் என் மக்களாய் இருப்பார்கள், நான் அவர்கள் கடவுளாய் இருப்பேன்" 

இது இஸ்ரயேல் மக்களுடன் இறைவன் செய்த உடன்படிக்கை. இஸ்ரயேல் மக்கள் கடவுளின் கட்டளைகளுக்குப் பணிந்து நடந்திருக்க வேண்டும். ஆனால் மக்கள் நாளடைவில் உடன்படிக்கையை மீறினர். வேற்றுத் தெய்வங்களை வழிபட்டனர், இறை உறவை இழந்தனர். இதனால் பிற இனத்தவரால் அடிமைப்படுத்தப்பட்டனர். நம்பிக்கையின் கதவுகள் அடைக்கப்பட்டது, அவா்கள் அவநம்பிக்கையின், விரக்தியின் உச்சத்தில் இருந்தனர். இவ்வேளையில் தான் இறைவன் இறைவாக்கினர் எசாயா வழி நம்பிக்கையின் விழிகளைத் திறக்கின்றார். 

எசாயா 35:4 "திடன் கொள்ளுங்கள், அஞ்சாதிருங்கள். இதோ உங்கள் கடவுள் பழி தீர்க்க வருவார். அநீதிக்குப் பழிவாங்கும் கடவுளாக வந்து உங்களை விடுவிப்பார்" என்று நம்பிக்கை ஒளியூட்டுகிறார் அதோடு. எசாயா 41:10 "அஞ்சாதே, நான் உன்னுடன் இருக்கின்றேன் கலங்காதே நான் உன் கடவுள் நான் உனக்கு வலிமை அளிப்பேன். உதவி செய்வேன், என் நீதியின் வலக்கரத்தால் உன்னைத் தாங்குவேன்" என்ற இறைவன், பாபிலோனிய அடிமைத்தளையை சைரஸ் அரசன் வழியாக தகர்த்தார்.

பாவத்தளைகளை அழித்து நம்மை தந்தை கடவுளோடு இணைக்கும் இயேசு மெசியாவின் முன்னோடியாக மன்னன் சைரஸ் விளங்கினார். இஸ்ரயேலின் அடிமைதளைகள் திறக்கப்பட்டது. இயேசு மெசியாவின் காலத்தின் அறிகுறிகளாக அல்லது இறையாட்சியின் அடையாளங்களாக எசா 35:6 பார்வையற்றோரின் கண்கள் பார்க்கும், காதுகேளாதோரின் செவிகள் கேட்கும். 

எசா 35:7 "காலூனமுற்றோர் மான்போல் துள்ளிக் குதிப்பர் வாய் பேசாதோர் மகிழ்ந்து பாடுவர்" என்று உண்ர்த்தப்படுகிறது.

இவற்றை இன்றைய நற்செய்தியில் நாம் பார்க்கின்றோம், காது கேளாத, திக்கி பேசுகிறவர் மீது கைவைத்து தொட்டு குணப்படுத்துமாறு மன்றாடினார்.

🔴 தன் விரல்களால் காதுகளையும், உமிழ்நீரை அவர் நாவில் வைத்து அவன் செவியையும், நாவையும் திறக்கின்றார்.

🟡 உமிழ்நீரைத் தடவி பேய்களை ஓட்டும் பழக்கம் யூதர்களிடையே உண்டு.

🟢 மேலே அண்ணார்ந்து பார்ப்பது தந்தை இறைவனோடு ஒன்றிக்கிறார், உறவாடுகின்றார் என்பதையும்

🔴 பெருமூச்சு விடுவது - இயேசுவின் கனிந்த இதயத்தையும் சுட்டுகிறது. வலியவரின், எளியவரின் உற்ற நண்பனாக இயேசு வெளிப்படுகின்றார்.

🟡இயேசுவின் ஒரு வார்த்தையில் ஆர்ப்பரித்த கடல் அடங்கியது. இலாசரே! வெளியே வா என்ற போது இலாசர் உயிர்த்தார். தலித்தாகூம் என்ற போது சிறுமை உயர் பெற்றார் அத்தகைய ஆற்றல்மிகு செயல் செய்த இயேசு உமிழ்நீரை குணமாக்கும் கருவியாக்கினார்.

🟣உமிழ்நீரும் திறக்கப்படு என்ற சொல்லும் இயேசுவின் கனிவை, கருணையை, இரக்கத்தைச் சுமந்து செல்லும் கருவிகள்.

🔵எதையும் கண்டும், கேட்டும், தொட்டும் அறியத் துடிக்கும் மக்களுக்கு ஏற்ற வகையில் இந்த புதுமை அமைந்துள்ளது.

இன்று சமூகத்தில் இரு வித பார்வை பெற வேண்டும்

1. உடல் திறக்கப்பட வேண்டும்

2. உள்ளம் திறக்கப்பட வேண்டும்

உடல் பார்வை

இன்றைய நற்செய்தியில் காதும், நாவும் - திறக்கப்பட்டது.

உள்ளப்பார்வை

♦️சக்கேயு உள்ளம் திறந்த போது - சென்ற இடமெல்லாம் நன்மை செய்த இயேசுவைப் பார்த்தான்.

♦️சிலுவையில் கள்வன் ஒருவர் - இயேசு மெசியா, நீதிமான் என்பதை தன் உள்ளத்தால் பார்த்தான்.

♦️காது, கண், நாவு, உடல் உறுப்புகள் நன்றாக செயல்படும் நாம் இந்த சமூகத்தை மறு வாசிப்பு செய்ய வேண்டும்.

♦️ மறு வாசிப்பு செய்யாதவரை நம் கண்களும், நமது செவியும் நமது நாவும் திறக்கப்படவில்லை.

எடுத்துக்காட்டாக - பலர் கண்ணிருந்தும் பார்வையற்றவராகத்தான் இருக்கின்றோம். 

♦️அநீதிகள், அவலங்கள், அக்கிரமங்கள் நம் கண்முன் நடக்கும் போதும்.

♦️வறியவர்களுக்கு எதிராக பிறர் அநீதிகள் புரியும் போதும் இந்தத் தவறுகளைச் தவறு என்று சுட்டி காட்டவில்லை எனில் நம் இதயமும், கண்களும், நாவும் திறக்கப்படவில்லை அடைபட்டு கிடக்கிறது.

♦️துன்பங்களை, துயரங்களை, அநீதிகளைக் கண்டு துடித்தெழாத மனிதன் பார்வையற்றவன்.

♦️பொய்யும், அவதூறும், பிறருடைய பெயரை கெடுக்கும் செயல்களிலும் நாம் மௌவுனிக்கிற போது நம் செவிகள் திறக்கவில்லை.

♦️உண்மைக்கு எதிரான, நீதிக்கு எதிரான, பிறர் வாழ்வை கெடுக்கும் செயல்களை, நாம் பேசித் திரியும்போது நம் நாவுகள் கட்டப்பட்டிருக்கிறது.

♦️இறைவன் நமக்கு நல்லவற்றைப் பார்த்து, பேசி, கேட்டு வாழ்வாக்க கூடிய சூழலை அமைத்து தந்திருக்கும் போது நம் கண், செவி, இதயங்கள் நல்லவற்றிறக்காய் திறக்கப்படுகிறதா?

♦️அநீதியான முறையில் ஒரு எபிரேயன் கொல்லப்பட்டதை கண்ட மோசேயின் கண்கள் திறக்கப்பட்டது போல

♦️இயேசு மெசியாவை காண சக்கேயுவின் கண்களும், இதயமும் திறக்கப்பட்டது போல

♦️இன்று, இப்போதே வான் வீட்டில் இருப்பாய் என்று இயேசுவால் வாழ்வு வழங்கப்பட்ட நல்ல கள்ளனின் கண்கள் திறக்கப்பட்டது போல்

♦️இவரே எதிர்பார்த்த மெசியா என்று உணர்ந்து இரவோடு இரவாக இயேசுவை சந்தித்த நிக்கோதேமின் கண்கள் திறக்கப்பட்டதைப் போல்

♦️கிறிஸ்து வாழ்வு வழங்குபவர் என்பதை கண்ட நூற்றுவர் தலைவரின் கண்கள் திறக்கப்பட்டதைப் போல்

♦️இயேசுவால் மட்டுமே தனக்குப் பார்வை தர முடியும் என்று உணர்ந்து, மன்றாடி பார்வை பெற்ற பார்த்திமேயுவின் கண்கள் திறக்கப்பட்டதைப் போல

♦️அவர் நம்மோடு பேசி, அப்பத்தை பிட்கும் போது நாம் உள்ளம் பற்றி எாிய வில்லையா? என்று உணர்ந்து தங்கள் இதயத்தை திறந்த திருத்தூதர்களைப் போல் நம் இதயத்தையும் திறப்போம்!

🔴பகைமையை ஒழித்து அன்பு இதயத்தை திறப்போம் !

🔴அநீதியை விலக்கி நீதியின் கதவை திறப்போம் !

🔴சமத்துவமற்ற பிரிவினை தவிர்த்து சமத்துவ கதவை திறப்போம் !

🔴வன்முறை என்னும் தீமையை தவிர்த்து அமைதியின் கதவை திறப்போம்!

இறைமகன் இயேசுவின் குரலை கேட்டு இதயக் கதவை திறப்போம்!

இறைவன் வாழும் இல்லமாவோம்!

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.

👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋

தேனருவி மீடியா

http://youtube.com/c/thenaruvimedia

Subscribe பண்ணுங்க.*


No comments:

Post a Comment