Friday, September 13, 2024

பொதுக்காலம் 24-ம் - ஞாயிறு மறையுரை -15.09.2024.

 👉 இறைச் சிந்தனை 

தேனருவி மீடியா

பொதுக்காலம் 24-ம் ஞாயிறு

15.09.2024

எசாயா 50: 5 - 9, 

யாக்கோபு 2 : 14 - 18,

மாற்கு 8: 27- 35.

அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.

இயேசு நமக்கு யார்?

🔴என்னே அதிகாரம் கொண்ட போதனை? பேய்களும் இவருக்கு கீழ்படிகின்றன. புயல் காற்றையும் இவர் அடக்குகிறார் என்னே  இவரால் ஆகும் செயல்கள்? என்று வியப்படைந்தாலும், இயேசவை மெசியாவாக ஏற்றுக் கொள்வதில் தயக்கம் இருந்தது.

🔵பன்நெடுங்காலமாய் மெசியாவிற்காக காத்திருந்த இஸ்ரயேல் மக்கள், மெசியா ஆடம்பரத்தோடும், அதிகாரத்தோடும் பெரும்படையோடும் வந்து மீட்பார் என்ற கருத்தியல் கொண்டவர்களுக்கும் இயேசுவை மெசியாவாக ஏற்பதில் சஞ்சலம் இருந்தது.

🟣அவர்கள் எண்ணப்படி மெசியாவிற்குரிய ஆடம்பரமும், புறவினத்தாரை அடக்கி ஆளும் அதிகாரத்தில் கடுகளவும் ஆர்வம் இயேசுவிடம் இல்லாததால் அவரை ஒரு சாதாரண இறைவாக்கினராகத்தான் நினைத்தனர்.

🟡இத்தகைய சூழலில் இயேசு மெசியாவை , நற்செய்தியாளர் மாற்கு துன்புறும் மெசியாவாகக் காட்டி, மக்களின் எண்ணங்களில் ஒரு புதிய செய்தியை பதிய வைக்கிறார்.

எசா 55:8 "என் எண்ணங்கள் உங்கள் எண்ணங்கள் அல்ல உங்கள் வழிமுறைகள் என் வழிமுறைகள் அல்ல" என்ற எசாயாவின் வார்த்தைகள். இயேசுவின் வாழ்வை பணியைப் பிரதிபலிப்பதாய் அமைந்துள்ளது.

🟢இன்றைய வழிபாடு இயேசு நமக்கு யார்? அவருக்கும் நமக்குமான உறவு என்ன, அவரின் எண்ணங்களை நாம் எப்படி புரிந்து கொள்கிறோம் என்று சிந்திக்க அழைக்கிறது வழிபாடு.

நிகழ்வு

இங்கிலாந்து நாட்டின் 19. ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மிகச் சிறந்த கட்டுரையாளர் திரு சார்லஸ் லேம்ப். இவருடைய காலத்தில் ஒரு விவாதத்தில் இவ்வுலகில் மிகச்சிறந்த ஆளுமை கொண்ட இருவர் என்ற தேடலில் இருவரைத் தேர்வு செய்தனர். (1) ஆண்டவர் இயேசு (2) 17 - ஆம் நூற்றாண்டின் ஷேக்ஸ்பியர். இந்த இருவரில் யார் மிகப்பெரிய ஆளுமை என்ற விவாதம் மீண்டும் தொடர்ந்தது அப்போது விவாதத்திற்கு நடுவராக இருந்தவர் மிக நுட்பமான பதிலை வழங்கினார்.

இந்த இரு நபர்களுக்கு இடையே உள்ள வேறுபாடு என்பது யாதெனில் நாம் அமர்ந்திருக்கும் இந்த அறையில் இப்போது ஷேக்ஸ்பியர் வந்தால் நாம் எல்லாரும் எழுந்து நின்று வாழ்த்து சொல்வோம். பாராட்டுவோம். அதே வேளையிலேயே இயேசு வந்தால் அனைவரும் பணிந்து வணங்கி வழிபடுவோம். ஏனெனில் ஷேக்ஸ்பியர் ஒரு சாதாரண இலக்கியவாதி இயேசுவே இவ்வுலகை மீட்ட மீட்பர் என்றார்.

இன்றைய வழிபாடு நம்மை நாம் ஆய்வு செய்யவும் நமக்கு இயேசு யார் என்று இனம் காணவும், அவர் வழியில் பயணமாகவும் அழைக்கிறது.

துன்புறும் ஊழியர்

இன்றைய முதல் வாசகமான எசாயா நூல் துன்புறும் ஊழியனை குறித்து விளக்குகின்றது. இறைவாக்கு பணிக்காக அழைக்கப்பட்டவர்களை ஆண்டவரே உடன் பயணித்து பண்படுத்துகிறார். எதை? எப்படி? யாரிடம் ? எங்கு? பேச வேண்டும்? என்பதை ஆண்டவர் தெளிவுபடுத்துகிறார்.

எரே 1:9 "இதோ பார் என் சொற்களை உன் வாயில் வைத்துள்ளேன்" என்று அறிவுறுத்துகிறார் ஆண்டவரின் வார்த்தைகளின் வல்லமை என்ன?

எபி 4:12 "கடவுளின் வார்த்தை உயிர் உள்ளது, ஆற்றல் வாய்ந்தது, இரு பக்கமும் வெட்டக் கூடிய எந்த வாளினும் கூர்மையானது. ஆன்மாவையும் ஆவியையும் பிரிக்கும் அளவிற்கு குத்தி ஊடுருவுகிறது" என்று பார்க்கின்றோம். இந்த வார்த்தையின் வல்லமையால் இறைவன் துணை கொண்டு செய்ய வேண்டிய இறைவாக்கு பணி எப்படிப்பட்டது எனில்

எரே 1:10 "பிடுங்கவும், தகர்க்கவும், அழிக்கவும், கவிழ்க்கவும், கட்டவும், நடவும் இன்று நான் உன்னை மக்களினங்கள் மேலும், அரசுகள் மேலும் பொறுப்பாளனாக ஏற்படுத்தினேன்" என்ற இறைவார்த்தை வழி அறிந்திருக்கின்றோம்.

♦️பிற்போக்கான, மக்கள் நலனில் அக்கறையற்ற செயல்களை, சிந்தனைகளை பிடுங்கி பறிக்கவும்.

♦️தன்னல , சுயநல சுவர்களை இடித்து தவிர்க்கவும்.

♦️அநீதியான, அக்கிரமான செயல்களை அளிக்கவும்

♦️காழ்ப்புணர்ச்சிகளை, கடவுள் விருப்புக்கு எதிரான செயல்களை கவிழ்த்துப் போடவும்.

♦️மானுடத்தை, மானுடய நேயச் செயல்களை, மக்கள் சமூகத்தைக் கட்டி எழுப்பவும்.

♦️நல்ல, உயர்வான, மதிப்பீடுகளை நட்டு வைக்கவும் அழைக்கப்பட்டனர்.

இத்தகைய பணியை செய்த போது அனுபவித்த துன்பங்களைத்தான் முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எசாயா இயம்புகிறார்.

♦️என் முதுகை, தாடியைப் பிடுங்கினார்கள்.

♦️என்னை இல்லாதது பொல்லாததுச் சொல்லி பரிகசித்து நிந்தனை செய்தார்கள்.

♦️என் மேல் காறி உமிழ்ந்து என்னை அவமானப்படுத்தினார்கள்.

♦️என்னைக் குற்றவாளி போல் தீர்ப்பிட்டனர். ஆனால் நான் அவமானம் அடையவில்லை, 

இழிநிலை அடையவில்லை ஏனெனில் ஆண்டவரின் அருள் துணை என்னோடு உண்டு. எசாயா 50:7 "ஆண்டவராகிய என் தலைவர் துணை நிற்கிறார் நான் அவமானம் அடையேன்" என்ற இறைவார்த்தை வழி இறைவனுக்காக, இறைப்பணிக்காக துன்புறும் ஊழியன் நிலை விளக்கப்படுகிறது. ஆயினும் உன்னை மீட்கவும் உன்னை விடுவிக்கவும் நான் உன்னோடு இருக்கின்றேன் என்ற இவ்வார்த்தை வலிமை பெற வழிபாடு அழைக்கிறது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு மெசியா தன் மக்களுக்காக பணியாற்றி, பாடுபட்டு, இறக்க வேண்டும் என்பதை மிகத் தெளிவாக எடுத்துரைக்கின்றார். நற்செய்தியாளர் மாற்கு தன் நற்செய்தியின் மையப் பகுதியாகிய 8 -ம் அதிகாரத்தில் தன் பாடுகளை தன் சீடர்களுக்கு அறிவிக்கின்றார்.

🔵மக்கள் என்னை யார் என்று சொல்கிறார்கள் என்று கேட்பதன் வழி இருத புரிதல்களைப் பெற்றுக் கொள்கிறார்.

1. மக்களின் புரிதல்:

இயேசு இறைவாக்கினருள் ஒருவர் எனவேதான் திருமுழுக்கு யோவான், எலியா, மற்றும் முற்கால இறைவாக்கினருள் ஒருவர் என பதிலை வழங்கினர்.

2. சீடர்களின் புரிதல்:

சீடர்களில் முதல்வரான புனித பேதுரு ஒற்றை வார்த்தையில் பதில் வழங்கினார் "நீர் மெசியா" ஆனால் மெசியா என்று பேதுரு அறிக்கை விட்டாலும், பேதுரு மற்ற யூதரை போலவே, மெசியா அன்னியரை வீழ்த்தி, வெற்றி கொண்டு எதிரியை அடக்கி, இஸ்ரயேலுக்கான புதிய அரசை நியமிப்பார் என்று எதிர்பார்த்தார்.

இவ்வேளையில் இயேசு சீடர்களிடம் மானிட மகன் பலதுன்பங்கள் படுவார், மறைநூல் அறிஞர், மூப்பர்கள், தலைமைக் குருக்கள் ஆகியோரால் புறக்கணிக்கப்பட்டு, துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்படுவார் என்று தன் பாடுகளை பற்றி கூறியதும் பேதுரு இயேசுவை தனியே அழைத்துச் சென்று கடிந்து கொண்டார்.

இயேசு தந்தைக் கடவுளின் விருப்பத்தை நிறைவேற்ற வந்தவர். தந்தையின் விருப்பத்திற்கு எதிரானவை அனைத்தும் தீயவையாக கருதப்படுகிறது. ஆண்டவர் இயேசு பணிவாழ்வை தொடங்கும் முன்பு 40 நாள் உண்ணா நோன்பிருந்து தந்தை கடவுளிடம் மன்றாடிய பின்பு, தீயவன் அவரை அணுகி 3 முறை சோதித்தான். அப்போது அவரை மலை உச்சியில் நடத்தி என்னை ஒரு முறை வணங்கு, எல்லாவற்றையும் உனக்குத் தருகிறேன் என்று சோதித்த வேளை, ஆண்டவர் இயேசு மத் 4:10 "அகன்று போ சாத்தானே" என்று கடிந்தார். இன்றைய நற்செய்தியில் பேதுரு,  தந்தை கடவுளின் விருப்பிற்கு மாறாக, இத் துன்பங்கள் உமக்குக் கூடாது என்ற போது

மாற்கு 8:33 "என் கண் முன்னே நில்லாதே சாத்தானே" என்று கடிந்து கொள்கிறார். இயேசுவின் பார்வையில் தந்தை கடவுளின் விருப்பிற்கு எதிரானவை எல்லாம் தீயவரின் எண்ணங்களே என்பதை உறுதி செய்கிறார்.

மத் 16:17 "யோனாவின் மகனான சீமோனே, நீ பேறுபெற்றவன், என்ற இயேசு மத் 16:23 "இயேசு பேதுருவை திரும்பிப் பார்த்து என் கண்முன்னே நில்லாதே சாத்தானே" - நீ எனக்குத் தடையாய் இருக்கிறாய் என்றார். இன்றைய வழிபாடு நமக்கு இரு வினாக்களை நம்மில் வைக்கிறது.

1. இயேசு நமக்கு யாராக இருக்கிறார்?

2. நாம் இயேசுவின் பார்வையில் பேறுபெற்றவராக இருக்கின்றோமா?

 சிந்தித்து பேறுபெற்றவராக வாழ அழைக்கப்படுகின்றோம். நாம் பேறு பெற்றவராக வாழ இறைவன் விடுக்கும் அழைப்பு

1. நாம் சொல்லிலும் பேச்சிலும் அல்ல செயலில் உண்மையான அன்பை விளங்கச் செய்ய வேண்டும் (1 யோ 3:18)

2. நம் நற் செயல்களைக் கண்டு பிறர் விண்ணகத் தந்தையை போற்றி புகழும் படி வாழ அழைக்கப்படுகின்றோம் (மத் 5:16)

அவ்வாறு வாழ வேண்டுமானால் நம் தலைவரும், தந்தையும் ஆண்டவருமான மீட்பர் இயேசுவின் அழைப்புக்கு செவிமடுப்போம். அவர் விடுக்கும் அழைப்பு யாதெனில், சிலுவைகளை சுமந்து, அவரைப் பின்பற்றிச் சென்று, ஆன்மாவை இழந்து விடாமல் காத்துக் கொள்ள அழைக்கும் இயேசுவின் அழைப்புக்கு செவிமடுக்கும்போது இயேசுவின் விருப்பத்திற்கு உரியவராக மாறவும்.

🔵சீமோனை போன்ற பேறுபெற்றவராக மாறுவோம்.

🔴அப்போது இயேசு நமக்கு மெசியாவாக, வாழும் கடவுளின் மகனாக புலப்படுவார்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.

👋👋👋👋👋👋👋👏👏👋👋👋👋👋👋👋👏👏👋

தேனருவி மீடியா

http://youtube.com/c/thenaruvimedia

Subscribe பண்ணுங்க.*

No comments:

Post a Comment