Friday, September 27, 2024

பொதுக்காலம் 26-ம் - ஞாயிறு மறையுரை -29.09.2024.

 👉 இறைச் சிந்தனை 

தேனருவி மீடியா

பொதுக்காலம் 26-ம் ஞாயிறு

29.09.2024

எண்  11: 25 - 29, 

யாக்கோபு 5 : 1 - 6,

மாற்கு 9: 38- 48.

அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.

என் வார்த்தையில் நிலைத்திருங்கள்

🔴இறைவார்த்தை உயிருள்ளது, ஆற்றல் வாய்ந்தது.

🟣இறைவார்தை பூமியை உருவாக்கி, ஒருங்கமைத்தது.

🟢உலகை வடிவமைத்ததும், வாழ்வை வழங்கியதும் இறைவார்த்தை.

🔵இறந்தவர்களை வாழ்விப்பதும் இல்லாததை இருக்கச் செய்வதும் இறைவார்த்தையே

இதை உணர்ந்த பேதுரு

யோவான் 6 : 68 "ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம் நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம் தானே உள்ளன" என்றார்.

🟡இந்த ஆண்டவரின் வார்த்தையை நம்பினால் அது வாழ்வுக்கு இட்டுச் செல்லும்.

🟡நாம் இறைவார்த்தையை நம்பி, அவ்வார்த்தையில் நிலைக்க வழிபாடு அழைக்கிறது.

நிகழ்வு

பேராயர் ஃபுல்டன் ஷீன் ஒருமுறை விமானப் பயணம் செய்யும்போது, பேரழகு மிக்கப் பணிப்பெண் தட்டில் குளிர்பானம், மற்றும் இனிப்பு பரிமாறினார். அவளது அழகு, செயல் இவற்றைக் கண்ட பேராயர் வியப்புற்று அவரிடம் "அன்பு மகளே கடவுள் உனக்கு அழகை கொடுத்திருக்கிறார். அது உனக்கு ஆசீர்வாதமாக அமையட்டும். நீ ஆண்டவருக்கு எப்போதும் நன்றியுள்ளவளாய் இரு" என்று கூறிய பின்பு

சபை உரையாளர் 12:1 "ஆகையால் உன்னைப் படைத்தவரை உன் இளமை பருவத்தில் மறவாதே" என்றும் கூறி அனுப்பினார். 

இரண்டு ஆண்டுகளுக்குப் பின் பேராயருக்கு ஒரு கடிதம் வந்தது அதில் "அன்பு தந்தையே என் வேலையை நான் ராஜினமா செய்துவிட்டேன். இப்போது நான் தொழுநோயாளர்களைப் பராமரிக்கும் துறவறசபையில் சேர்ந்திருக்கிறேன்" என்று எழுதப்பட்டிருந்தது. இதை வாசித்த பேராயர் இக்கடிதம் விமானத்தில் தான் சந்தித்தப்பெண் என்பதை புரிந்து கொண்டார். அவர் கூறி அனுப்பி இறைவார்த்தை அவரில் 100% கனி கொடுத்ததற்கு நன்றி சொன்னார்.

🔴இறைவார்த்தைய ஏற்று, நம்பி, அதில் நிலைத்திருப்பவர் புது வாழ்வுக்குக் கடந்து போனார்.

🔴விடுதலை வாழ்வுக்கு இஸ்ரயேலரை வழிநடத்த அழைக்கப்பட்ட மோசேயிடம் இறைவன் கூறிய வார்த்தைகளில் உறுதியாய் நிலைத்து நின்றார்.

விடுதலைப் பயணம் 3:12 "அப்போது கடவுள் நான் உன்னோடு இருப்பேன் மேலும் இம்மக்களை எகிப்திலிருந்து அழைத்துச் செல்லும் போது, இம்மலையில் கடவுளை வழிபடுவீர்கள். நானே உன்னை அனுப்பியுள்ளேன் என்பதற்கு அடையாளம் இதுவே" என்றும்

விடுதலைப் பயணம் 3:14 "கடவுள் மோசேயை நோக்கி இருக்கின்றவராக இருக்கின்றவர் நானே" என்ற இறைவார்த்தையில் நிலைபெற்றார்.

🟣ஆண்டவரின் வார்த்தையில் நிலைபெற்ற மோசே ஆண்டவரின் உரிமைச் சொத்தாகிய இஸ்ரயேல் மக்களை பல்வேறு நெருக்கடிகள், துன்பங்கள் வந்த போதும் இறை விருப்பப்படி அவர்களை வழிநடத்தினார்.

🟣இறைவாக்கினர் எரேமியாவை ஆண்டவர் அழைத்தபோது நான் சிறுபிள்ளை, பேசத் தெரியாது என்று சொன்ன எரேமியாவிடம் ஆண்டவரின் வார்த்தை அவரை உறுதியூட்டி நிலைநிறுத்தியது. 

எரேமியா 1:7 "சிறுபிள்ளை நான் என்று சொல்லாதே யாரிடம் எல்லாம் உன்னை அனுப்புகின்றேனோ அவர்களிடம் செல் எவற்றையெல்லாம் சொல்லக் கட்டளை இடுகின்றேனோ அவற்றைச் சொல்" என்ற ஆண்டவரின் வார்த்தையில் நிலைபெற்ற போது துணிந்து இறைவாக்குரைத்தார்.

🟢சொந்த மக்களால் ஏற்றுக் கொள்ளாமை, புறக்கணிப்பு, அவமானங்கள் அடைந்து உள்ளம் சோர்ந்து புலம்பிய எரேமியாவை நிலைநிறுத்தியதும் ஆண்டவரின் வார்த்தைகளே.

எரேமியா 15:21 "தீயோரின் கையினின்று நான் உன்னைக் காப்பேன் முரடரின் பிடியினின்று உன்னை மீட்பேன்" என்ற இறைவனின் வார்த்தையில் நிலைத்ததால், இறைவாக்குப் பணியில் நம்பிக்கைகுரிய ஊழியராய் நிலைபெற்றார்.

🔴நற்செய்தியாளர் யோவான் 

இறைவாா்த்தையில் நாம் நிலை பெற்றால்

(1) அவரின் சீடராகின்றோம்

(2) உண்மையை அறிவோம்

(3) உண்மை வழி நாம் விடுதலையை பெற்றுக் கொள்வோம் என்கிறார்.

யோவான் 8:32 - 33 "என் வார்த்தையை நீங்கள் தொடர்ந்து கடைபிடித்து வந்தால் உண்மையில் என் சீடர்களாய் இருப்பீர்கள், உண்மையை அறிந்தவர்களாயும் இருப்பீர்கள் உண்மை உங்களுக்கு விடுதலை அளிக்கும் என்பார்"

நிகழ்வு

பாகிஸ்தானைச் சேர்ந்த 40 வயது நிரம்பிய இஸ்லாமிய பெண் ஸகுஃப்தா கிரண். இவரும் இவரது கணவரும், நான்கு பிள்ளைகளும் இஸ்லாத்தை பின்பற்றியவர்கள். ஸகுஃப்தா கிரண் தன் நண்பர்கள் வழி இறைவார்த்தையை வாசிக்கிறாள்.  இறைவார்த்தையின் உண்மையை, உயிருள்ள மீட்பரை அறிந்து கொள்கிறார். அவரின் வழிகாட்டுதலில் அவர் கணவரும், நான்கு பிள்ளைகளும் கிறிஸ்தவர்களானார்கள். தான் அறிந்த, அனுபவித்த கிறிஸ்துவின் உயிருள்ள வார்த்தைகளை வாட்ஸ்அப் மூலம் நண்பர்களுக்கு அனுப்புகிறார்.

இது இஸ்லாத்திற்கு எதிரானது என்று அவளை 2021 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அரசு கைது செய்தது, சிறையில் அடைத்தது ஆயினும் அவளும் அவரின் குடும்பத்தாரும் இறைவார்த்தையில், வாழ்வு தரும் வார்த்தையில், இறைவனில் ஆழமாய் வேரூன்றினார்கள். தற்போது 2024 செப்டம்பரில் மத அவமதிப்புச் சட்டத்தின் கீழ் அவருக்கு மரண தண்டனையை பாகிஸ்தான் அரசு வழங்கியது. அவள் கலங்கவில்லை, உலக நாடுகளின் எதிர்ப்பு காரணமாக தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

🔵தடைகள், துன்பங்கள், நெருக்கடி, சிறைவாசம் நம் விசுவாச அனுபவத்தை ஒருபோதும் சிதறடிக்க முடியாது என்பதனையும் நாம் இறைவார்த்தையில் நிலைக்கும் போது கிறிஸ்துவின் அன்பினின்று நம்மை எதுவும் பிரிக்க முடியாது என்பதையும் ஸகுஃப்தா புலப்படுத்துகிறார். தூய பவுல் இதனை

உரோமையர் 8:35 "கிறிஸ்துவின் அன்பினின்று நம்மைப் பிரிக்கக் கூடியது எது? வேதனையா? நெருக்கடியா? இன்னலா? பட்டினியா? ஆடையின்மையா? இடரா? சாவா ? எதுதான் நம்மைப் பிரிக்க முடியும்" என்று வினா எழுப்புகிறார். இறைவார்த்தையில் நாம் நிலைக்கும் போது உண்மையை அறிந்து, அவரின் சீடராகி, உண்மை வழி நாம் வாழ்வுக்கு கடக்கின்றோம்.

1. உண்மையை அறிதல்

திருஅவையின் அனைத்துப் புனிதர்கள், மறைசாட்சிகள் அனைவரும் வழியும் உண்மையும், வாழ்வுமான  கிறிஸ்துவை முழுமையாய் அறிந்தவர்கள். ஆண்டவர் எவ்வளவு நல்லவர் என்று சுவைத்தவர்கள். ஆண்டவரின் வார்த்தையே தங்கள் காலடிக்கு விளக்காய் உணர்ந்து இறைவழி வாழ்வை அமைத்தவர்கள். தூய பவுல்,

பிலிப்பியர் 3:8 "உண்மையில் என்னை பொறுத்தமட்டில் என் ஆண்டவராம் கிறிஸ்து இயேசுவைப்பற்றிய அறிவே நான் பெறும் ஒப்பற்ற செல்வம்" என்றார். இன்றைய நாள் கிறிஸ்துவை, அவரின் உயிருள்ள வாழ்வு தரும் வார்த்தைகளை அறிய அழைக்கிறது.

2. அவரின் சீடராதல்

பிலிப்பியர் 4:4 "ஆண்டவரோடு இணைந்து என்றும் மகிழுங்கள் மீண்டும் கூறுகிறேன் மகிழுங்கள்" சீடத்துவம் என்பது தலைவராகவே நாம் மாறுவதாகும்.

கலாத்தியர் 2:20 "வாழ்வது நானல்ல என்னில் கிறிஸ்துவே வாழ்கிறார்" என்பது போல ஆண்டவரும், தலைவருமான கிறிஸ்துவின் அடியொற்றி கிறிஸ்துவுக்காய் நம்மை இழப்பது. நம் வாழ்வால் நற்செய்தியாவது. நம் செயல்களால் ஆபிரகாமின் பிள்ளைகள் என்பதை உணரச் செய்வது. அறப்பணிகளாலும், அன்புப்பணிகளாலும், கிறிஸ்துவுக்குச் சான்று பகர்வது. சிலுவைகளை மன உப்போடு தாங்குவது. என்ன நோ்ந்தாலும் கடவுளுக்கு இடைவிடாத நன்றி செலுத்துவது. சீடத்துவ வாழ்வுக்கு எடுத்துக்காட்டாக (1) ஸ்டேன் சுவாமி (2) புனித தேவசகாயம்.

3. உண்மை வழி விடுதலை பெறல்

உண்மை என்பது கிறிஸ்து ஆண்டவர் இயேசு தன்னைக் குறித்துச் சொல்லும் போது

யோவான் 14:6 "வழியும் உண்மையும் வாழ்வும் நானே" என்றார் இந்த உண்மையும், வழியையும் நாம் அறிந்தால் வாழ்வை பெறுவோம்.

கொலோ 3:4 "கிறிஸ்துவே உங்களுக்கு வாழ்வு அளிப்பவர்" என்று தூய பவுல் அறிவுறுத்துகிறார். யோவான் நற்செய்தியில் வரும் சமாரியப் பெண் பாவத்தின் பிடியில் வாழ்ந்தவர். ஆண்டவரோடு உரையாடிய போது

யோவான் 4:19 "ஐயா, நீர் ஓர் இறைவாக்கினர் என கண்டுக்கொண்டேன்" என்று உண்மை கடவுளை, மீட்பரை அறிந்து கொள்கிறாள். அதோடு அவரே மீட்பர் என்பதையும் உலகோர்க்கு அறிவித்தார்.

🟣சீமோன் பேதுரு ஆண்டவரை குறித்துச் சொல்லும் போது மத்தேயு 16:16 "நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்" என்று சான்று பகந்தார்.

நாமும் உண்மையை அறியவும், அதில் நிலைபெறவும் சான்று பகிரவும் அழைக்கப்படுகின்றோம்.

நம்முடைய அன்றாட நிகழ்வுகளில், ஆண்டவரின் வார்த்தையில் நிலை பெற்றவர்களாக செயல்படுகின்றோமா?

🔴எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக என்ற இறைமகன் இயேசுவின் விருப்பத்தில் நிலைக்கின்றோமா? 

🟣ஒருவர் என்னுடனும், நான் அவருடன் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனிதருவார். என்ற இயேசுவின் விருப்பை நிறைவேற்றி நற்கனி வழங்குகின்றோமா?

🟢நம்பிக்கை செயல்களில் நடைபெறவில்லை எனில் அது பயனற்றது என்ற யாக்கோபின் அறைகூவலை ஏற்று, நம்பிக்கையை செயலாக்கத்திற்கு கொண்டுச் செல்கிறோமா?

🔴தொண்டு ஏற்க அல்ல, தொண்டாற்றவே வந்தேன் என்ற இயேசுவின் அன்புப்பணியை உவப்போடு செய்கிறோமா? சிந்திப்போம்! இறைவார்த்தையில் நிலைத்து, நிறைவான மகிழ்வு காண்போம்!

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.

👋👋👋👋👋👋👋👏👏👋👋👋👋👋👋👋👏👏

தேனருவி மீடியா

http://youtube.com/c/thenaruvimedia

Subscribe பண்ணுங்க.*

No comments:

Post a Comment