Friday, October 11, 2024

பொதுக்காலம் 28-ம் - ஞாயிறு மறையுரை -13.10.2024.

 👉 இறைச் சிந்தனை 

தேனருவி மீடியா

பொதுக்காலம் 28-ம் ஞாயிறு

13.10.2024

சாஞா  7: 7 - 11, 

எபிரேயர் 4 : 12 - 13,

மாற்கு 10: 17- 30.

அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.

நிலை வாழ்வுக்குரியவராவோம்

🔴யூத சமூகத்தில், சமயத்தில் செல்வம் மிக்கவர்களை இறைவனின் ஆசீரை மிகுதியாய் பெற்றவர்கள் என்ற கருத்தியல் நிலை பெற்றிருந்தது. இணைச்சட்டம் 28:3 - 4

🟣ஏழைகள், நலிந்தவர், கைம்பெண்கள், நோயாளிகள், குழந்தைகள், பெண்கள் எல்லாம் சபிக்கப்பட்ட இனமாக, இறையாசீரைப் பெற தகுதியற்றவர்கள் என்ற எண்ணம் நிலைபெற்றது.

🟡இயேசுவின் சீடர்களும் இதே கருத்தை உள்வாங்கியவர்களாகவே இருந்தனர்.

🔵ஆனால் ஆண்டவர் இயேசுவின் பார்வை முற்றிலும் மாறுபட்டதாய் அமைந்தது. இன்றைய நற்செய்தியில் மாற்கு 10:23 "செல்வர் இறையாட்சிக்கு உட்படுவது மிகவும் கடினம்" என்றார். இது அவரைப் பின்பற்றியவர்களுக்கு ஆச்சரியம் கொடுத்தது. அதே நேரம் அதிர்ச்சியையும் அளித்தது.

🟢ஆண்டவர் இயேசு விரும்புவதெல்லாம் அன்பை உள்ளத்திலும், இரக்கத்தைக் கண்களிலும் சுமந்து, பிறர் துன்பம் போக்க துடிக்கும் இதயம் நமக்கு வேண்டும் என்று.

🔴பிறர் பசியால் வாடும் போது இருப்பதை பகிரும் உள்ளமே நிலைவாழ்வுக்குரிய செயல் என்று அறிவுறுத்துகிறார்.

🟣இயேசு பேராசை பிடித்தவர்களை, பகிரும் மனம் இல்லாதவர்களை பார்த்து சொன்னார் செல்வர் இறையாட்சிக்கு உட்படுவது கடினம் என்று.

🟡வீழ்ந்து கிடப்போரை நாம் நாடிச் சென்று, பகிரும் பண்பாட்டை நிலைபெறச் செய்தால் நம்மில் நிலை வாழ்வு உதயமாகும்.

எனவே இருப்பதைப் பகிர்ந்து, மகிழ்ந்து, அன்பு உறவில் நிலைபெற்று நிலைவாழ்வின் கருவியாக வாழ வழிபாடு அழைக்கிறது.

நிகழ்வு

குஜராத் மாநிலம், சபர்கந்தா பகுதியில் உள்ள மிகப்பெரிய செல்வந்தர் திரு. பாவேஷ் பண்டாரி குடும்பம். இவர் சபர்கந்தா மற்றும் அகமதாபாத் ஆகிய பகுதிகளில் கட்டுமான தொழிலில் சிறந்து விளங்கினார். 200 கோடி சொத்துகளுக்கு மேல் சேமித்திருந்த செல்வந்தர். இரு குழந்தைகள் இவர்கள் ஜைன சமயத்தைச் சார்ந்தவர்கள்.

2019 - ஆண்டு இவரின் 19 வயது மகளும், 16 வயது மகனும் ஜைன சமய முறைப்படி எல்லாவற்றையும் துறந்து தலைமழித்து, கையில் யாசகப் பாத்திரம் ஏந்தி, இரு ஆடைகள் மட்டுமே உடமையாக்கி, சன்னியாச வாழ்வை பற்றிக் கொண்டனர்.

2024 பிப்ரவரியில் பவேஷ் பண்டாரி மற்றும் அவரது மனைவி தங்களின் 200 கோடி சொத்துக்களையும் துறந்து, ஜைன சமய மரபுபடி, தலைமழித்து, யாசகப் பாத்திரம் ஏற்று, இரு உடைகளோடு, தீட்சைப்பெறப் போவதாக அறிவித்தனர். அதோடு, சொத்துக்களை ஏழைகளுக்கு வழங்கிவிட்டு, கட்டுக்கோப்பான ஆன்மீகம், கடுந்தவம், சமய கட்டுப்பாடு நிறைந்த துறவு வாழ்வுக்குக் கடந்து சென்றனர்.

ஆடம்பரம், சொகுசு கார்கள், குளிர்சாதன வசதியான இல்லம், மிக உன்னதமான உணவு, ஆடம்பர அலங்கார வைர நகைகள், ஆடைகள் எல்லாம் துறந்து வீதியில் யாசித்து எளிய வாழ்வை தேர்ந்தெடுத்த குடும்பம் உலகிற்கு உரக்கச் சொல்வது "செல்வத்தால் வாழ்வு வருவதில்லை" இதனை லூக்கா 12:15 "எவ்வகை பேராசைக்கும் இடங்கொடாதவாறு எச்சரிக்கையாய் இருங்கள். மிகுதியான உடைமைகளைக் கொண்டிருப்பதால் ஒருவருக்கு வாழ்வு வந்து விடாது" இதனை உணர்ந்த குடும்பம் இழப்பிலே நிறைவை, மகிழ்வை, வாழ்வைப் பெற்றனர்.

இன்றைய வழிபாடு நிலை வாழ்வுக்கான நெறிமுறைகளை எடுத்தியம்புகிறது.

🔴நிலைவாழ்வு பெற நாம் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை விடுதலைப்பயணம் 20:12 - 16 வரை நாம் வாசிக்கின்றோம். இதை நன்கு  அறிந்திருந்தவர், ஆண்டவர் இயேசுவிடம், நிலைவாழ்வு பெற நான் என்ன செய்ய வேண்டும் என்று வினவுகிறார்.

முழந்தாழ்படியிட்டு, நல்ல போதகரே! என்று மாண்போடு அழைத்து கேட்கிறார். இயேசுவின் பதில் பழைய ஏற்பாட்டு நூல்களில் மோசே வழங்கிய நெறிமுறைகளை நினைவுபடுத்துகிறார்.

மாற்கு 10:19 "கொலை செய்யாதே, விபச்சாரம் செய்யாதே, களவு செய்யாதே, பொய்ச் சான்று சொல்லாதே, வஞ்சித்து பிழைக்காதே, உன் தாய் தந்தையை மதித்து நட" இவை அனைத்தும் பிறழாமல் வாழ்வில் கடைபிடிக்கிறேன் என்ற அவரிடம்,  இயேசு உமக்கு குறைவாய் இருப்பது ஒன்று அது பகிராமை.

மாற்கு 10:21 "நீர் போய் உமக்குள்ளவற்றை விற்று ஏழைகளுக்கு கொடும். அப்போது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர் பின்பு வந்து என்னைப் பின்பற்றும்" என்றபோது பகிராத, பகிர விரும்பாத மனம் சோகமாய் சென்றதாக நற்செய்தி எடுத்துக் கூறுகிறது.

🔴ஆண்டவர் இயேசுவின் அழைப்பை ஏற்க மனமில்லாத, பகிர மனமில்லாத மக்களைப் பார்த்து தான் சொன்னார்.

மாற்கு 10:23 "செல்வர் இறையாட்சிக்கு உட்படுவது மிகவும் கடினம்" என்று இது செல்வர்களை ஆண்டவர் வெறுத்தார் என்பதல்ல.

🔵இயேசுவின் இறையாட்சிப் பணியில் தங்களை இணைத்து அாிமத்தியா சூசை,  நிக்கோதேம், மீட்பை உரிமையாக்கிய சக்கேயு ஆகிய இவர்கள் செல்வர்களே.

🔵உலக வாழ்வில் ஒருவரை எளிதில் இறைவனிடமிருந்து பிரிப்பது சிலை வழிபாடாகிய பேராசையே.

🔵இந்தப் பேராசையால் செல்வத்தை கடவுளாக நினைக்கும் மனநிலை ஏற்படலாம். இது மனித ஆன்ம இழப்புக்கு வழிகோலுகிறது.

பழைய ஏற்பாட்டு காலங்களில் செல்வர்கள் அல்லது செல்வம் ஆசிராக கருதப்பட்ட சூழலில் ஆண்டவர் இயேசு பகிரா மனம் கொண்ட, சுயநல செல்வர்களை கண்டித்தது சீடர்களை வியப்பில் ஆழ்த்தியது.

🔵இன்றைய நற்செய்தியில், செல்வத்தை பகிராத, பகிர மனமில்லாத மனிதரின் சோகமான, வருத்தமான மனநிலையைப் பார்க்கின்றோம்.

நீதிமொழி 19:17 "ஏழைக்கு இரங்கி உதவி செய்கிறவன் ஆண்டவருக்கு கடன் கொடுக்கிறான். அவர் கொடுத்ததை ஆண்டவரேத் திருப்பி தந்து விடுவார்"

🔵கடவுளுக்காகவும், நற்செய்திக்காகவும், இவ்வுலகில் செல்வங்களை இழந்தால் நிலைவாழ்வை பெறுவோம்.

யோவான் 3:36 "மானிட மகனிடம் நம்பிக்கை கொள்வோர் நிலைவாழ்வு பெறுவர்" மாறாக இறைவனில் நம்பிக்கை கொள்ளாமல் உலகப் பொருட்களின் மேல் அதிகப்பற்று வைப்பவர்கள் விண்ணக ஆசீரைத் தேட மனமில்லாதவர்கள் என்பது ஆண்டவர் இயேசுவின் வார்த்தையில் புலப்படுகிறது.

🟣செல்வம், கடவுளின் ஆசீர், நம்பிக்கை கொண்டோருக்கு இறைவனின் கைமாறு செல்வம் என்ற மரபுச் சூழலில், அழியாத செல்வமாகி ஆண்டவர் மேல் முழு நம்பிக்கை கொண்டு நிலைவாழ்வை பெற அழைக்கிறார் ஆண்டவர். ஏனெனில் கடவுளுக்கும், செல்வத்திற்கும் ஒருவர் ஊழியம் செய்ய இயலாது.

பகிர்வு - மீட்பின் அடையாளமாய் மாறுகிறது.

லூக்கா 19:8 "ஆண்டவரே என் உடமைகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுத்து விடுகின்றேன். எவர் மீதாவது பொய்க்குற்றம் சுமத்தி எதையாவது கவர்ந்திருந்தால் நான் நான்கு மடங்காக திருப்பிக் கொடுத்து விடுகிறேன்" என்று தான் அநீதமாய் சம்பாதித்த, சேர்த்த செல்வத்தை நான்கு மடங்கு அதிகமாக பகிர முன்வந்த போது

லூக்கா 19:9 "இன்று இந்த வீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று ஏனெனில் இவரும் ஆபிரகாமின் மகனே " என்றார். ஏனெனில் சக்கேயு

🔴வாழ்வு தருபவா் கிறிஸ்து என்பதை அடையாளம் கண்டார்.

🟡உண்டானது எல்லாம் அவராலேயே உண்டானது என்பதை உணர்ந்தார்.

🔴ஒப்பற்ற செல்வமாகிய கிறிஸ்துவை ஆதாயமாக்க விரும்பினார்.

🟡நிலை வாழ்வை உரிமையாக்க இவ்வுலக செல்வங்களை இழக்கத் துணிந்தார். எனவேதான் ஆண்டவர் இயேசு சக்கேயுவிற்கு 

🔵மீட்பையும்

🔵ஆபிரகாமின் மகன் - என்ற அந்தஸ்தையும் வழங்கி கடவுளுக்காக இழக்கவும், மனம் மாறவும் துணிந்ததால் நிலைவாழ்வு நிச்சயம் என்பதை உறுதி செய்தார்.

🔵பகிராத உள்ளத்தால், வாழ்வால் எப்பயனும் இல்லை.

🔵ஆண்டவரில் நம்பிக்கை வைக்கிறேன், இறைவார்த்தையின் வழியில் வாழ்கிறேன் என்று சொல்லிக் கொள்ளும் நாம் இறையாட்சிக்காய் நம்மை இழக்கவில்லை எனில் அது நமக்கு எப்பயனையும் தருவதில்லை.

1கொரிந்தியர் 13:1 "நான் மானிடரின் மொழிகளிலும், வானதூதரின் மொழிகளிலும் பேசினாலும் அன்பு எனக்கில்லையேல் ஒலிக்கும் வெண்கலமும், ஓசையிடும் தாளமும் போலாவேன்" என்ற பவுலடியாரின் வார்த்தைகள் நம்மை நிலைவாழ்வுக்கு அழைத்துச் செல்லட்டும். அன்பால் கசிந்துருகி இதயத்தில் உற்றெடுக்கும் ஈரத்தால் கருணையோடு அடுத்தவரை பார்க்கும் போது நம்மை நாம் பகிர்வோம்.

🟣கிறிஸ்துவை ஆதாயமாக்கி நிலைவாழ்வை பெற்றுக்கொள்ள நாம் நமது - பணம், பொருள், திறமை, அறிவு, ஆற்றல், நேரம், ஆறுதலான வார்த்தைகள், கனிவான பேச்சு இவற்றைப் பகிர்வோம். ஆபிரகாமின் பிள்ளைகள் ஆவோம்!

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.

👋👋👋👋👋👋👋👏👏👋👋👋👋👋👋👋👏👏👋

தேனருவி மீடியா

http://youtube.com/c/thenaruvimedia

Subscribe பண்ணுங்க.*

No comments:

Post a Comment