👉 இறைச் சிந்தனை
தேனருவி மீடியா
பொதுக்காலம் 29-ம் ஞாயிறு
20.10.2024
எசாயா 53: 10 - 11,
எபிரேயர் 4 : 14 - 16,
மாற்கு 10: 35- 45.
அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.
பணியால், பண்பால் தலைமை ஏற்போம்
🟣நல்ல தலைமையின் இலக்கணம் பணிவும், பணியும்தான்.
🔵நல்லத்தலைவன், நல்ல ஆயனைப்போல் முன் சென்று வழிகாட்டுவான்.
🟡இயேசு வாழ்ந்த யூத சமூகத்தில் தலைவர்கள் மக்கள் மீது கரிசனை இன்றி, அன்பு செய்யாது, மனிதநேயமற்ற மனதோடு சட்டங்களை முன்னிலைப்படுத்தினர்.
🔴நல்ல ஒரு தலைமைக்காக மக்கள் ஏங்கி இருந்த சமயத்தில் எளிய, கருணையும், இரக்கமும், அன்பும், கரிசனமும் கொண்ட தலைவராக மக்கள் இயேசுவைக் கண்டனர்.
🟢ஆண்டவரின் வலப்புறமும், இடப்புறமும் இடம் கேட்டதால் யாக்கோபு, யோவான் மேல் மற்ற சீடர்களுக்குப் பொறாமையும், விவாதமும் எழுகிறது.
🟣ஆண்டவர் இயேசுவுக்கு அருகில் அமர ஆசைப்படுகிறவர்கள்
♦️பணிவும், தாழ்ச்சியும் உடையவர்களாய் இருக்க வேண்டும்
♦️முதன்மையான இடங்களை விரும்பக்கூடாது
♦️விளம்பரத்தை விரும்பித் தேடக்கூடாது
♦️தன்னை எல்லாருக்கும் மேலானவர்கள் என்று நினைக்க கூடாது
♦️பிறரை இழிவாகக் கருதாதவர்களாய் இருக்க வேண்டும்.
♦️பிறரை மதிக்க வேண்டும்
♦️மனித நேயத்தோடும், சமூக நீதியோடும் வாழ வேண்டும்.
உண்மையும், நீதியும், பொறுமையும் உடையவரே ஆண்டவருக்கு அருகில் அமர தகுதிப்படைத்தவராகிறார்.
மாற்கு 10:44 "உங்களுள் முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர் அனைவருக்கும் பணியாளராக இருக்கட்டும்" என்றார்.
நிகழ்வு
சுவாமி தயானந்தரைப் பார்க்க பண்டிதர் ஒருவர் வந்தார். அவர் கற்றவர். ஞானி அருகில் இருந்த இருக்கையில் அமர வைத்தார். அந்த இருக்கை சற்று தாழ்வாய் இருந்தது. பண்டிதர் கோபம் கொண்டார். பத்தும் படித்த எனக்கு, தாழ்வான இருக்கை தான் கிடைத்ததா என்று கோபப்பட்டார் பண்டிதர்.
மன்னிக்க வேண்டும் என்று, தனது இருக்கையை வழங்கினார் சுவாமி தயானந்தர். அவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போது காகம், மரக்கிளையில் அமர்ந்து கத்தியது. பண்டிதரிடம் பக்குவமாய் சொன்னார் சுவாமி தயானந்தர். உம் ஆசனத்தை விட உயர்ந்த இடத்தில் அமர்ந்து உள்ளதே அந்த காகம் அது நிச்சயமாய் உம்மைவிட அதிகம் படித்திருக்க வேண்டும் என்று. அது பண்டிதரின் உள்ளத்தில் ஓங்கி அறைந்ததைப் போல் இருந்தது.
சுவாமி தயானந்தர் சொன்னார், பண்டிதரே மதிப்பும், மரியாதையும் என்பது உயர்வான பதவியோ, இருக்கையோ அல்ல, மாறாக உன்னதமான வாழ்வில் அடங்கி இருக்கிறது என்றார்.
இன்றைய நற்செய்தியில் யாக்கோபு, யோவான் ஆகிய இருவரும் வலப்புறமும் இடப்புறமும் இருக்கைக் கேட்கிறார்கள். இப்படி கேட்பதற்கு ஒரு காரணம் இருந்தது. யூத மரபில் தான் இந்த ரபியின் சீடர் என்று கூறிக் கொள்வதில் பெருமை கொண்டார்கள்.
திருமுழுக்கு யோவானைச் சிறந்தப் போதகராகக் கண்டனர். எதிர் பார்த்திருந்த மெசியாவாகக் கூடக் கண்டனர். தூய பவுல் அன்றைய நாளில் புகழ்பெற்ற காமலியனின் சீடன் என்று பெருமைப்பட்டான்.
திபணி 22:3 "நான் ஒரு யூதன். சிசிலியாவில் உள்ள தர்சு நகரத்தில் பிறந்தவன். ஆனால் இந்த எருசலேம் நகரில் வளர்க்கப்பட்டவன். காமாலியனின் காலடியில் அமர்ந்து நம் தந்தையரின் திருச்சட்டங்களில் நுட்பமாகப் பயிற்சி பெற்றேன்"
🟣இயேசு வாழ்ந்த நாட்களில் மக்கள் வியக்கும், போற்றும் மிகச்சிறந்த மக்களை கவர்ந்த ஒரு போதகராக விளங்கினார்.
திபணி 10:38 "அலகையின் கொடுமைக்கு உட்பட்டிருந்த அனைவரையும் அவர் விடுவித்து எங்கும் நன்மை செய்து கொண்டே சென்றார்"
🟢ஆகவே அவரின் இடப்புறமும், வலப்புறமும் அமர்வது என்பது மாண்பாக எண்ணினார். இந்தப் பின்னணியில் தான் யார்? யார்? எங்கு அமர்வது என்ற விவாதம் எழுகிறது.
எனவேதான் ஆண்டவர் இயேசு, உங்களுள் முதன்மையானவராக இருக்க விரும்புகிறவன், அனைவருக்கும் பணியாளராக இருக்கட்டும் என்றார்.
🔴முதன்மையின், சிறப்பு என்பதே பணியும், தொண்டும் தான் இயேசு இதை செய்து காட்டினார்.
யோவான் 13:15 "நான் செய்தது போல நீங்களும் செய்யுமாறு நான் உங்களுக்கு முன்மாதிரி காட்டினேன்"
என்ன முன்மாதிரியெனில் சீடர்களின் காலடிகளை குருவாகிய கிறிஸ்து பணிவோடு கழுவியது.
🟡பணியால் உயரலாம், பணியால் புகழ் பெறலாம், நற்பண்புகளால் புவியில் நிலைக்கலாம்.
🟡திருமுழுக்கு யோவான் இயேசுவின் சமகாலத்தவர் மிக பிரபலமானவர். மக்களால் மதிக்கப்பட்டவர் துணிச்சலோடு பேசக்கூடியவர், ஆண்டவருக்கான வழியை ஆயத்தம் செய்தவர். அவர் இறைமகன் இயேசுவை குறித்துச் செல்லும் போது
லூக்கா 3:16 "ஆண்டவருடைய மிதியடிவாரை அவிழ்க்கக் கூட எனக்குத் தகுதி இல்லை" என்று தன்னை பணிவோடு காட்டுகிறார்.
🔵ஆண்டவர் இயேசு திருமுழுக்கு யோவானைக் குறித்து சொல்லும் போது
மத்தேயு 11:11 "மனிதராய் பிறந்தவர்களுள் திருமுழுக்கு யோவானை விடப் பெரியவர் எவரும் தோன்றியதில்லை" என்றார்
🟣புகழ், உயர்வு, மதிப்பு, மரியாதை எல்லாம் பதவி, பட்டங்கள், இருக்கைகளில் அல்ல மாறாக பணியில், பணிவில் இருக்கிறது.
🟢பாலஸ்தீனத்தில் இரு கடல்கள் இருக்கிறது
1. கலிலேயாக் கடல்
2 சாக்கடல்
1. கலிலேயாக் கடல்
இதனைச் சுற்றி பசுமை, செழுமை நிறைந்திருக்கும். நிறைய மீன்கள் உண்டு, மரங்கள் வளர்ந்து வனப்பு மிக்கதாய் இருக்கும்.
♦️ஆண்டவர் இயேசு இளைப்பாறும், போதிக்கும், பயணிக்கும் இடமாகக் காட்டப்படுகிறது.
2. சாக்கடல்
இந்தப் பகுதியில் மரங்கள் இல்லை, இக்கடலில் மீன்கள் இல்லை, பயனற்ற ஒன்று, உயிர் வாழ்வதற்கு ஒத்து வராத ஒன்று எனவே மனிதர்கள் இக்கடலை நாடுவதில்லை.
♦️ஆச்சரியம் என்னவென்றால் இரு கடல்களுக்கும் யோர்தான் நதிநீர் தான் செல்கிறது.
♦️கலிலேயா கடல் நீரை உள்வாங்கி பிற ஏரிகளுக்கு அனுப்பி வைக்கிறது. அங்கு இயற்கையின் ஆனந்த களி நடனம்.
♦️சாக்கடல் - நீரை உள்வாங்கி தனக்கென மட்டும் வைத்துக் கொள்கிறது. பகிராத உள்ளங்கள் உறவற்று, உயிரற்று, பாழ்பட்டு போகும். மரண ஓலமும், முடைநாற்றமும் கேட்கும்.
🔴நாம் எங்கு நிற்கின்றோம்? இயேசுவின் சீடன் அவரின் பாடுகளிலும், மரணத்திலும் பங்கு பெறுபவராய் இருக்க வேண்டும்.
🟣இந்த இரு சீடர்களும் ஆண்டவர் இயேசுவிடம் கேட்கும்போது தெளிவில்லாதவர்களாய் கேட்டாலும், அவர்கள் நாளடைவில் தெளிவு பெற்று இயேசுவுக்காக வேதனைகள் அனுபவித்து, அவரது பாடுகளிலே பங்கு பெற்றனர்.
🔵ஒவ்வொரு கிறிஸ்தவரும் திருமுழுக்கின் வழியாக இயேசுவின் மரணத்திலும், உயிர்ப்பிலும் பங்குப் பெறுகின்றோம்.
🟢இதை நாம் செயல்களில் எண்பிக்கத்தான் வழிபாடு நமக்கு அழைப்புத் தருகிறது.
🔴இயேசுவைப்போல் பணிவாழ்வு, பலிவாழ்வு -க்கு நம்மை ஆயத்தப்படுத்துகிறோமா?
🟣இறையாட்சிப் பணியில் என் பங்கென்ன?
🟡பணியால், அன்பால் இயேசுவின் தலைமைப்பண்பை உலகிற்குப் பரப்புவோம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.
👋👋👋👋👋👋👋👏👏
தேனருவி மீடியா
http://youtube.com/c/thenaruvimedia
Subscribe பண்ணுங்க.*
No comments:
Post a Comment