Friday, November 1, 2024

பொதுக்காலம் 31-ம் - ஞாயிறு மறையுரை -03.11.2024.

 👉 இறைச் சிந்தனை 

தேனருவி மீடியா

பொதுக்காலம் 31-ம் ஞாயிறு

03.11.2024

இணைச்சட்டம்  6: 2 - 6, 

எபிரேயர் 7 : 23 - 28,

மாற்கு 12: 28- 34.

அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.

அன்பின் உலகு படைப்போம்

🟢அன்பு அது அனுபவம், ஆற்றல், கடவுள்

🟣அன்பு இறைவனுக்கும் -மனிதருக்கும், மனிதருக்கும் -மனிதருக்கும் பாலமாக அமையும் உறவு.

🟡இந்த அன்பும், உறவும் முழுமையானதாக, தூயதாக விளங்க வேண்டும் என்று ஆண்டவர் இயேசு எடுத்துக் கூறுகிறார்.

🔵அன்பும் நட்பும் எங்கு உள்ளதோ அங்கே இறைவன் உறைகின்றார்.

🔴அன்பின் இறை குலமாய் அவனியில் ஆண்டவரின் சாட்சியாய் வாழ வழிபாடு அழைக்கிறது.

🟢இறையன்பு மனிதனை மீட்கிறது, மனித அன்பு உறவு பாராட்டி மனித சமூகத்தை உயிர்ப்பிக்கின்றது.

🟣அன்பை வாழ்வாக்குகிறவர்கள் புனிதத்தைப் பற்றிக் கொள்கின்றனர். மனிதருள் மாமனிதர்களாய் மாண்புகிறார்கள்.

நிகழ்வு - 1

முன்னாள் ஜனாதிபதி APJ அப்துல்கலாம், ஜனாதிபதி மாளிகையில் நுழைந்த முதல் நாள், ஒரு மனிதன் அவருடைய காலணிகளை தூய்மை செய்தான். அப்துல்கலாம் இது என்ன? என்ன செய்கிறாய் என்றார். இது என் வேலை, இத்தேசத்தின் முதல் குடிமகன் நீங்கள் உங்கள் காலணிகளை தூய்மை செய்வது என் பணி என்றார். நீ இன்று முதல் இந்த பணியில் இருந்து நீக்கப்படுகிறாய் என்றார். அந்த மனிதன் அதிர்ந்து உடைந்து போனார். நீங்கள் வந்ததும் என்னை பணியிலிருந்து நீக்கிவிட்டீர்களே? என்று தன் குடும்பத்தை நினைத்து வருந்தினான். அப்துல்கலாம் சொன்னார் நீங்கள் இந்த பணியில் இருந்து தான் நீக்கப்பட்டிருக்கிறீர்கள். நீங்கள் தோட்டப்பணியாளராகப் பணி புரியுங்கள். ஒரு மனிதரின் காலணியை இன்னொருவர் தூய்மைப்படுத்துவது அடிமைத்தனம். அவரவர் அவரவர் காலணிகளை தூய்மைப்படுத்திக் கொள்ளலாம் என்றார். மரபுகளையும் சட்டங்களையும் உண்மை  அன்பு உடைத்தெறியும்.

நிகழ்வு - 2

2004 - ஆம் ஆண்டு, ஜப்பானில் டோக்கியோ நகரில் பயன்பாட்டில் இல்லாத ஒரு பழைய கட்டிடத்தை இடித்து மாற்ற அரசு தீர்மானித்தது. கட்டிடம் இடித்து மாற்றும் முன்பு வேலையாட்கள் கட்டிடத்தின் அறைகளை சோதனை செய்தபோது கண்ட காட்சி சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கட்டிலில் மரணமாகி கிடந்த ஒரு மனிதனின் எலும்புக்கூடு. அதனை உடற்கூற்ராய்வு செய்தபோது மருத்துவர் சொன்னது, இம் மனிதன் Heart Attack - ல் இறந்திருக்கிறார் என்று.

இதைவிட அதிர்ச்சி என்னவென்றால் அவ்வறையில் கிடந்த காலண்டர் 1984 ஆண்டைச் சுட்டி நின்றது. கடந்த 20 ஆண்டுகளாய் அம்மனிதன் எலும்பு கூடாய் இங்கே கிடக்கிறான். எவரும் அவரை விசாரிக்கவில்லை அவரைத் தேட யாரும் முன் வரவில்லை, யாரும் அவரை நினைத்துப் பார்க்கவில்லை.

🔵நம்மை நினைத்துக்கூட பார்க்க ஒரு மனிதர் இல்லை என்பது மனித உறவு நிலையில் கொடுமை.

🔵வெளியே சென்ற பின் தொலைபேசியில் கூப்பிட்டு கேட்கும் கண்டிக்கும் தந்தை உண்டெனில்

🔵பலமுறை அழைத்து எங்கிருக்கிறாய் என்று விசாரிக்கும் தாய் உண்டெனில்

🔵அண்ணா எங்கிருக்கிறாய் என்று அன்பு காட்டும் ஒரு தங்கை உண்டெனில்

🔵அடிக்கடி குறும் செய்தி அனுப்பும் நண்பர்கள் உண்டெனில்

🔵சின்ன சின்ன விஷயங்களுக்காய் செல்லமாய் கோபித்துக் கொள்ளும் உறவுகள் உண்டெனில் கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள்.

🔵காரணம் உங்களை நினைத்துப் பார்க்க ஒரு சிலராவது இந்த உலகில் உண்டு.

"Thank you Jesus for I am loved"

🔴அன்புக்கட்டளையைக் கடைபிடிக்கும் அனைவரும் அவனியில் சிறந்து விளங்குவர். புனிதத்துவத்தை மேற்கொள்வர்.

🔴அன்பின் ஆழத்தை உணர்ந்தோம் எனில் வரலாற்று பக்கங்களில் இடம் பிடிப்போம்.

இன்றைய முதல் வாசகமும், நற்செய்தியும், முழுமையான தூய அன்பைக் குறித்து பேசுகிறது.

யாவே கடவுள் இஸ்ரயேல் மக்கள் தன்னை முழுமையாக அன்பு செய்ய வேண்டும் என்று விரும்பினார். 

🔵தான் அளித்த நியமங்களையும், சட்டங்களையும் பின்பற்றுவதன் மூலம் இறையன்பு உடைய மக்களாக இருக்கிறார்கள் என்பதை உலகறியும்.

எசே 11:20 "அவர்கள் என் நியமங்களின் படி நடப்பார்கள் என் நீதி நெறிகளுக்குச் செவி கொடுத்து அவற்றைக் கடைபிடிப்பார்கள். அவர்கள் என் மக்களாய் இருப்பார்கள். நான் அவர்கள் கடவுளாய் இருப்பேன்" இறை விருப்பப்படி நடந்தால் தந்தை தன் பிள்ளைகளை நேசிப்பது போல் இறைவன் தன் உரிமைச் சொத்தாக, தன் சொந்த மக்களாக ஏற்று அன்பு செய்கிறார் என்பதை வழிபாடு உணர்த்துகிறது.

இஸ்ரயேல் மக்கள் மனநிலை

ஓசேயா 11:7 "என் மக்கள் என்னை விட்டு விலகிப் போவதிலேயே கருத்தாய் இருக்கிறார்கள்" என்ற இறைவாக்கினர் ஓசேயாவின் வார்த்தைகள் இஸ்ரயேல் மக்களின் வாழ்வை பிரதிபலிப்பதாய் அமைந்தது. வாழ்வு தருகிறவரும், வழி நடத்துகிறவரும் பாதுகாத்து பராமரிக்கின்றவருமான யாவே கடவுளைப் புறந்தள்ளி பிற தெய்வ வழிபாடுகளில் தங்கள் மனதைப்  பறிகொடுத்தனர்.

இச.5:6 "உன் கடவுளாகிய ஆண்டவர் நானே" என்ற கடவுள், வேற்று தெய்வ வழிபாட்டை சகிக்காத இறைவன். இஸ்ரயேல் மக்களின் இறை வழிபாட்டை இறைவாக்கினர் எரேமியா "தண்ணீர் தேங்காத உடைந்த குட்டைகளை தங்களுக்கென்று குடைந்து கொண்டார்கள்" என்று கூறுவார். இந்தப் பின்னணியில் தான், ஆண்டவர் இஸ்ரயேல் மக்களுக்கு புதிய வழிமுறையை வகுத்தளித்தார்.

இஸ்ரயேல் மக்கள் கடவுளின் அன்பை மறந்து பிரமாணிக்கம் தவறி, பிற தெய்வ வழிபாட்டிற்குள் அடைப்பட்டபோது, பிற மன்னர்களிடம் அடிமைகளாய் ஒப்படைத்தார். பாபிலோன், அசிரியா, எகிப்து மற்றும் உரோமையர்களுக்கு அடிமைகள் ஆனார்கள். மனம் வருந்திய போது, விடுதலையின் மக்களாய் ஆண்டவர் அவர்களை வழி நடத்தினார். அப்போது ஆண்டவர் அவர்களிடம் உன் முழு இதயம், முழு உள்ளம், முழு ஆற்றலோடு அன்புச் செய்யப் பணிக்கின்றார்.

மறைநூல் அறிஞரின் மனநிலை

ஆண்டவர் இயேசுவிடம் பலவிதமான மனநிலை கொண்டவர்கள், பலவிதமான எண்ணங்களோடு பல கேள்விகளை எழுப்பினர். இவர்களை இரு வகையாகப் பிரிக்கலாம்.

1. சூழ்ச்சியான மனநிலை

2 உண்மை அறியும் மனநிலை

(1) சூழ்ச்சியான மனநிலை

பரிசேயர், ஏரோதியர் ஆண்டவர் இயேசுவைப் பேச்சில் சிக்க வைக்கும் மனநிலையில் கேள்விகள் கேட்டனர்.

மாற்கு 12:14 "சீசருக்கு வரி செலுத்துவது முறையா இல்லையா" என்ற வினாவை எழுப்பினர்.


யோவான் 8- ஆம் அதிகாரத்தில் விபச்சாரத்தில் பிடிபட்ட பெண்ணை அழைத்து வந்து, மோசே சட்டப்படி கல்லால் எறிய வேண்டும், நீர் என்ன சொல்கிறீர். என்று சோதிக்கும் நோக்குடன் கேட்பதையும், ஆண்டவர் இயேசு ஞானத்தோடு பதிலுரைப்பதையும்  பார்க்கின்றோம்.

(2) உண்மை அறியும் மனநிலை

இன்றைய நற்செய்தியில் மறைநூல் அறிஞர்களுள் ஒருவர்,  உண்மையை அறியும் நோக்குடன் வினா ஒன்றை எழுப்புகிறாா். இக்கேள்வி வழி உண்மை மறையில் அடிப்படை பண்புகளை, போதனையை ஆண்டவா் இயேசு விளக்குகிறாா்.

அனைத்திலும் முதன்மையான கட்டளை எது? இது மறைநூல் அறிஞாின் வினா? இயேசு பழைய ஏற்பாட்டின் சட்ட நூல்கள் வழி, மெய் ஞானத்தோடு பதில் வழங்குகிறார். முதன்மையான கட்டளை யாதெனில் இச 6:5 "உன் முழு இதயத்தோடும், உன் முழு உள்ளத்தோடும், உன் முழு ஆற்றலோடும் உன் கடவுளாகி ஆண்டவரிடம் அன்பு கூர்வாயாக" கடவுளின் சாயலாய், கடவுளால் படைக்கப்பட்ட மனிதனின் முதல் கடமை ஆண்டவரை முழுமையாய் குறைவின்றி அன்பு செய்வது. கடவுளை அன்பு செய்வதற்கு இணையான அன்பு கட்டளை ஒன்றையும் தோரா வழி விளக்குகிறார்.

லேவி 19:18 "உன் மீது நீ அன்பு கூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவன் மீதும் அன்பு கூர்வாயாக" என அன்பின் பரிணாமத்தை விளக்கினார்.

சுருங்கக் கூறின் கடவுளையும், மனிதனையும் அன்பு பாராட்ட வேண்டும் என்பதே இறைவிருப்பு, இதுவே இறைச்சட்டம் என்பதை தெளிவுபடுத்தினார். இதனால் உள்ளம் கவரப்பட்டு மறைநூல் அறிஞர் இறைவனை அன்பு செய்வதும், அதுபோல் பிறரை அன்பு செய்வதும், 

மாற்கு 12:33 "எரிபலிகளையும், மற்ற பலிகளையும் விட மேலானது" என்று அறிவுத்திறனோடு பதில் கொடுத்ததை ஆண்டவர் கண்டு வியந்து

மாற்கு 12:34 "நீர் இறையாட்சியினின்று தொலைவில் இல்லை" என்று வாழ்த்துகிறார். ஏனெனில் கடவுளை அன்பு செய்கிறவன் மனிதரை, அயலாரை அன்பு செய்தாக வேண்டும். அப்படி இல்லையேல் அது பொய்மை, ஏமாற்று என்பதனையும் யோவான் வழி அறிகின்றோம். 1யோவான் 4:20 "கடவுளிடம் அன்பு செலுத்துவதாக சொல்லிக் கொண்டு தம் சகோதரர் சகோதரிகளை வெறுப்போர் பொய்யர்" எனத் தெளிவுப்படுத்துகின்றார்.


அன்பின் இரு பரிணாமம்

கடவுளை அன்பு செய்வது

மனிதனை அன்பு செய்வது

🔴இந்த அன்பு தான் கிறிஸ்தவ வாழ்வின் ஆணிவேரும் அடித்தளமும்.

🔴இந்த அன்பு தூய, கள்ளமற்ற, பிரமாணிக்கமுள்ள அன்பாகட்டும்.

🔴இன்று உலகு, அன்பை தொலைத்து சாதீயம், பணம், புகழ், வசதி பார்த்து செயல்படும் போலித்தனத்தில் புதையுண்டு கிடக்கிறது.

🔴நவீனத்துவம், பின் நவீனத்துவம், முதலாளித்துவம், தாராள மயம், நுகர்வு கலாச்சாரத்தில் உண்மை அன்பைத் தொலைத்து விட்டோம்.

🔴ஆண்டவர் பெயரால் அடுத்தவனை அழிக்கும் பேராபத்தை, அன்பை போதிக்கும் சமயங்கள் செய்கிற அவலநிலை .

🔴என்று தணியும் இந்த சுயநல மோகம்

🔴அன்பு முதியவரைப் பேணும் அன்பு வறியவரை நாடிச் செல்லும்

🔴அன்பு வாழ்வின் அழகிய பண்பு

🔴அன்பு மகிழ்வின் ஆணிவேர்

🔴அன்பு - பாசத்திற்காய் ஏங்கும் மக்களை நாடிச் செல்லும்.

🔴அன்பு பொறுமையின் விளைநிலம்

🔴அன்பு தற்புகழ்ச்சியில் மகிழ்வுறாது

🔴அன்பே கடவுள்.

எனவே அன்பாய் கசிந்துருகி, அன்பை அவனிக்கும் அடுத்தவருக்கும், ஆண்டவருக்கும் நம் செயல்கள் வழி வழங்கி புதிய உலகம் படைப்போம்!

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.

👋👋👋👋👋👋👋👏👏👋👋👋👋👋👋👋👏👏👋

தேனருவி மீடியா

http://youtube.com/c/thenaruvimedia

Subscribe பண்ணுங்க.*

No comments:

Post a Comment