👉 இறைச் சிந்தனை
தேனருவி மீடியா
பொதுக்காலம் 32-ம் ஞாயிறு
10.11.2024
1 அரசர் 17: 10 - 16,
எபிரேயர் 9 : 24 - 28,
மாற்கு 12: 38- 44.
அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.
கொடுப்பதே மகிழ்வும் இன்பமும்t
🟢இன்றைய வழிபாட்டின் நற்செய்தி வாசகம், யூத தலைவர்களின் சுயநலப் போக்கை சுட்டுகிறது. அதேநேரம் ஒரு ஏழைக் கைம்பெண்ணின் தியாகத்தையும் மெச்சி நிற்கிறது.
🔵மறைநூல் அறிஞர், குருக்கள், மூப்பர் ஆகியோரின் பகட்டான வாழ்வையும், மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் போக்கையும் தோலுரிக்கும் நேரத்தில், ஒரு கைம்பெண்ணின் தியாகம், சுயநலமற்ற வாழ்வின் உச்சமாக அப்பெண் விளங்குகிறார் என்பதை எடுத்துரைக்கிறது.
🟡யூத மரபிலே கைம்பெண்கள் சபிக்கப்பட்டவர்கள், ஒதுக்கப்பட்டவர்கள் . ஆனால் சுயநலமற்ற அக்கைம்பெண் இயேசுவின் பாராட்டைப் பெற்றார்.
🟣சமூகச் சூழலில் இருவிதமான பண்பு கொண்டோரை நாம் பார்க்கலாம்.
1. சுயநலத்தால் வாங்கி குவிப்பவர்
2. அன்பால் கொடுத்து மகிழ்பவர்.
🔴பரிசேயர், சதுசேயர், மறைநூல் அறிஞர், மூப்பர்கள் இவர்கள் சுயநலத்தால் ஆட்டி படைத்தவர்கள் பதவியையும், புகழையும் விரும்பித் தேடியவர்கள், எருசலேம் ஆலயத்தை வியாபாரக் கூடமாக்கியவர்கள், பக்தியை, சமய மரபுகளை, பொருளை மையப்படுத்தி விற்பனையாக்கினர்.
🟢அன்பால் கொடுத்து மகிழ்ந்தவர் கைம்பெண். மக்கள் காணிக்கை கொடுப்பதன் வழியாக தங்கள் சமய உணர்வை வெளிப்படுத்துகிறார்கள். தனக்கும் தான் சார்ந்து இருக்கும் ஆலயத்தின் உறவின் படைப்பாகவும் காணிக்கைகள் அமைந்தது. எனவே எளிய, தூய, நிறைந்த மனதோடு கைம்பெண் காணிக்கை செலுத்தினாள்.
(ஊடகச் செய்தி)
நிகழ்வு 1
ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சார்ந்த திரு. அருண் ஓரான் IPS தேர்வில் வெற்றி பெற்று பஞ்சாபில் தனது IPS பணியை ஆற்றினார். தன் சொந்த மாநிலமான ஜார்கண்ட் மாணவர்கள், சிறார்கள் கல்வியில் பின்தங்கி இருக்கிறார்கள் என்பதற்காக அவர்களுக்காக மாலை நேர பள்ளி வழியாக 2000 -க்கு மேற்பட்ட மாணவர்களுக்கு கல்வி வழங்கினார். ஜார்க்கண்ட் பழங்குடி மக்களின், பிள்ளைகளின் கல்விக்காக தன் IPS பதவியை 2014 ஆம் ஆண்டு ராஜினாமா செய்து விட்டு முழு நேர கல்விப் பணியை, மலைவாழ் மற்றும் பழங்குடி மக்களுக்காக செய்து வருகிறார்.
நிகழ்வு - 2
39 வயதான மனோஜ், கடந்த 15 ஆண்டுகளில் சாலை விபத்தில் காயமடைந்த 152 பேரின் உயிரை காப்பாற்றி இருக்கின்றார். அதோடு 11,000 -க்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு இலவச சிகிச்சை வழங்கி பாதுகாத்திருக்கின்றார். இது மட்டுமின்றி, விபத்தில் காயப்பட்டவர்களை, நோயற்றவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வசதி இல்லை என்பதை உணர்ந்து தனது சொந்த காரை ஆம்புலன்ஸாக மாற்றி இருக்கின்றார். ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு மகிழ்வை, வாழ்வை வழங்கி வரும் மனோஜ் ஒரு சாதாரண விவசாயி.
தன்னலம் துறந்து, பிறரின் வாழ்வையும், பிறர் வாழ்வின் நலனையும், முன்னிறுத்தி தங்களின் வாழ்வாதாரத்தை பகிரும் அருண் ஒரானும், மனோஜ் - ம் ஏழை கைம்பெண்ணின் மனநிலையை ஒத்தவர்களே.
இன்றைய முதல் வாசகத்திலும், நற்செய்தியிலும் கைம்பெண்கள் முக்கியத்துவம் பெறுகிறார்கள்.
🔵இஸ்ரயேல் அரசனான ஆகாபுவின் காலத்தில் (கி.மு. 874 - 853) இறைவாக்கினர் எலியாவை ஆண்டவர் அனுப்பி வைக்கிறார். நாட்டில் பஞ்சம் ஆயினும் ஆண்டவர் கெரீத்து ஓடையின் நீராலும், காகங்களினால் உணவும் வழங்கிப் பாதுகாத்தார்.
1அரச 17:4 "அந்த ஓடையில் தண்ணீர் குடித்துக்கொள் (கெரீத்து) அங்கே உனக்கு உணவளிக்குமாறு காகங்களுக்கு கட்டளையிட்டிருக்கின்றேன்" என்றார்.
🔴பஞ்சத்தால், நாட்கள் செல்லச்செல்ல கெரித்து ஓடையும் வற்றிப்போக, சீதோனில் இருக்கும் சாரிப்பாத்தில் வாழ்ந்த கைம்பெண் வழியாக ஆண்டவர் பாதுகாத்தார்.
திபா 34.7 "ஆண்டவருக்கு அஞ்சி வாழ்வோரை அவர்தம் தூதர் சூழ்ந்து நின்று காத்திடுவார்" என்பதற்கிணங்க ஆண்டவர் கைம்பெண் வழியாக பாதுகாத்தார்.
🟡ஆண்டவர் இயேசுவின் காலத்தில் வெளிவேடமான பரிசேயர் மத்தியில் எளிமையும், தியாகமும் நிறைந்த கைம்பெண் முதன்மை பெற்றார்.
🟣இக்காலத்தில் மறைநூல் அறிஞர்கள், தொங்கல் ஆடைகளை பகட்டாக அணிந்தனர். முதன்மையான இருக்கைகள், மக்களிடம் இருந்து வணக்கம் பெற பெரிதும் விரும்பினர். இதற்கு முற்றிலும் முரணான செயலாக கைம்பெண்ணின் செயல் அமைந்தது.
🟢பரிசேயர்கள் "டாலிட்" என்ற ஒரு ஆடையைச் செப வேளையில் அணிந்தார்கள். மறைநூல் அறிஞர் செபம் செய்யாத நேரங்களிலும் இந்த ஆடையை அணிந்து கொண்டு, செபிப்பதைப் போல் நடித்தனர்.
சீராக் 3:18 "நீ பெரியவனாய் இருக்கும் அளவுக்கு பணிந்து நட அப்போது ஆண்டவர் முன்னிலையில் உனக்குப் பரிவு கிட்டும்" என்ற இறைவார்த்தைக்கு முற்றிலும் முரணாய், சான்றோர்களிடம் காண வேண்டிய அடக்கமுடமை இவர்களிடம் சிறிதளவும் இல்லாமல் போயிற்று.
🔵மக்கள், மனிதர்களின் வெளிச்செயல்களைக் கொண்டே அவர்களை மதிப்பிடுவர். நமது எண்ணங்களையும், உள்நோக்கங்களையும் அறியார். ஆனால் இறைவன் உள்ளங்களை ஊடுருவிக் காண்கிறவர்.
1 சாமு 16:17 "மனிதர் பார்ப்பது போல் நான் பார்ப்பது இல்லை. மனிதர் முகத்தைப் பார்க்கின்றனர், ஆண்டவரோ அகத்தைப் பார்க்கின்றார்"
🔴மக்கள் முன் புனிதர்களாகக் காட்டிக் கொள்வது இறைவன் முன் செல்லாக் காசாகி விடும். செபிப்பதற்கான ஆடைகளால் தங்களை அலங்கரிப்பதும், முதலிருக்கைகளில் அமர்வதும், பொது இடங்களில் வணக்கம் பெறுவதால் ஒருவர் புனிதராகி விட முடியாது, இறைவனுக்கு ஏற்புடையவராக முடியாது.
🟡நீதிமான்களாக தங்களை காட்டிக் கொள்ளும் இவர்கள் மாற்கு 12:40 "கைம் பெண்களின் வீடுகளை பிடுங்கிக் கொள்கிறார்கள்" இது ஆண்டவர் பார்வையில் அருவருக்கத்தக்கதாய் இருந்தது ஏனெனில் விப22:22 "விதவை, அனாதையருக்கு நீ தீங்கிழைக்காதே" என்ற தோராவின் விதிமுறைகளை மீறி செயல்பட்டனர்.
🟣திருமறையில் இயேசுவின் பாராட்டைப் பெற்ற ஒரு சிலரில் எருசலேம் ஆலயத்தில் காணிக்கை செலுத்திய இந்த ஏழைக் கைம்பெண் அடங்குகிறார்.
🟢வற்புறுத்தலுக்காக, கடமைக்காக, எதிர்பார்ப்புகளோடு காணிக்கை செலுத்துபவர்கள் உண்டு. ஆனால் இவள் முழு மனதுடனும், நிறைவோடும், முழு மனதாழ்ச்சியோடும் காணிக்கை செலுத்தினாள்.
🔵பிறருக்குத் தன்னை, தன்னிடம் இருப்பதை பகிர்ந்த அளிப்பதில் ஒரு சிலர் மகிழ்வர். இத்தகையோரை மூன்று வகையில் பிரிக்கலாம்.
1. இருப்பதில் சிறிதைப் பகிர்வது
2. இருப்பது முழுவதையும் பகிர்வது
3 இருப்பதையும் தன்னையும் பகிர்வது
1. இருப்பதில் சிறிதைப் பகிர்வது
இதில், நாம் அடங்குவோம், எருசலேம் ஆலயத்தில் காணிக்கை செலுத்திய மற்ற மக்கள் அடங்குவர். நம்மிடம் இருப்பது அனைத்தையும் நாம் காணிக்கையாய் செலுத்துவதில்லை நம்மிடம் இருப்பதில் ஒரு சிறு பகுதியைக் காணிக்கையாக செலுத்துகின்றோம்.
2. இருப்பது முழுவதையும் பகிர்வது
இதற்கு இன்றைய முதல் வாசகத்தில் வரும் சாரிபாத் கைம்பண்ணும், நற்செய்தில் வரும் ஏழைக் கைம்பெண்ணும் சான்றாகும். இருவரும் (1)கணவனை இழந்தவர்கள் (2) மிகவும் ஏழைகள் (3) பிறரிடமிருந்து பெற்று வாழும் நிலையில் இருப்பவர்கள். ஆயினும், தங்களிடம் இருந்த அனைத்தையும், முழு மனதுடன் வழங்கினர்.
🔴சாரிபாத் கைம்பெண் வறுமையில் வாடியவர். பஞ்ச காலம் எதிர் காலத்திற்குரிய உணவின்றி தவித்தவள். எனினும் இறைவாக்கினர் எலியாவிற்கு தன்னிடம் இருந்த மாவு, எணணெய் இவற்றைப் பயன்படுத்தி அப்பம் சுட்டு பசியாற்றினார். இதன் விளைவு
1.அரசர் 17:16 "ஆண்டவர் உரைத்த வாக்கின்படி பானையிலிருந்து மாவும் தீரவில்லை. கலையத்திலிருந்த எண்ணெயும் குறையவில்லை" என்றபடி ஆண்டவர் ஆசீர்வதித்தார்.
🟣நற்செய்தில் வரும் கைம்பெண் தன் பிழைப்பு, வாழ்வுக்காக வைத்திருந்த எல்லாவற்றையும் வழங்குகிறார். நாளை, நாளைய குறித்த பாரத்தை ஆண்டவரிடம் வைத்துவிட்டு முழுதும் காணிக்கையாக்குகிறார். இதனால் ஆண்டவர் இயேசுவின் பாராட்டுக்குரியவராகின்றார். நம்பிக்கைக்குரியவராகின்றார்.
மாற்கு 12:43 "இந்த ஏழை கைம்பெண் காணிக்கைப் பெட்டியில் காசு போட்ட மற்ற எல்லாரையும் விட மிகுதியாக போட்டிருக்கின்றார்" என்ற பாராட்டப் பெற்றார்.
3. இருப்பதையும், தன்னையும் பகிர்வது :
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே இதற்குச் சான்று. நமது பாவங்களுக்காக தன்னையே பாவம் போக்கும் பலியாக ஒப்புக்கொடுத்தார்.
எபி 9:28 "கிறிஸ்துவும் பலரின் பாவங்களைப் போக்கும் பொருட்டு, ஒரேமுறை தம்மைத்தாமே பலியாக் கொடுத்தார்" என்று திருமறை வழி அறிகின்றோம்.
நாம் எங்கு நிற்கின்றோம் நம்மை ஆய்வு செய்ய வழிபாடு அழைக்கிறது.
🔵பெறுவதிலும் கொடுப்பதே இன்பம் என்பதை உணர்ந்து செயல்படுகின்றோமா?
🟢பிறாின் தேவை உணர்ந்து நம்மை நம்மிடம் உள்ளதை பகிர்கின்றோமா?
🟡நலிந்தவர் வாழ்வில் நலனுக்காக நம்முடைய நேரம் திறமைகள் இவற்றை இழக்கத் தயாரா?
🔴கொடுக்க கொடுக்க குறையாத அன்பை அள்ளி வழங்குகின்றோமா? சிந்திப்போம்!
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.
👋👋👋👋👋👋👋👏👏👋👋👋👋👋👋👋👏👏👋
தேனருவி மீடியா
http://youtube.com/c/thenaruvimedia
Subscribe பண்ணுங்க.*
No comments:
Post a Comment