👉 இறைச் சிந்தனை
தேனருவி மீடியா
பொதுக்காலம் 33-ம் ஞாயிறு
17.11.2024
தானியேல் 12: 1 - 3,
எபிரேயர் 10 : 11 - 14, 18,
மாற்கு 13: 24- 32.
அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.
மானிட மகனின் வருகையின் நாட்கள்
🟣நாம் வாழும் இந்த சமூகத்தில், சமூகச் சூழலில் பல விழாக்களைக் கொண்டாடுகின்றோம்.
🔵திருமணம், காதணி, பிறந்தநாள், புதுமனை புகுவிழா, ஆலயவிழா என்று.
🟢இவற்றிற்காய் பல மாதங்களுக்கு முன் குடும்பமாய் அல்லது குழுமமாய் அமர்ந்து திட்டமிடுகின்றோம்.
🟡திட்டமிட்டவற்றை நடைமுறைப்படுத்தப் பல முயற்சிகளை எடுக்கின்றோம். ஆனால் மானிட மகன் வருவார் என அறிந்திருக்கும் நாம், அதற்காக முன்னெடுக்கும் முயற்சிகள் என்ன?
🟣நம்மை நாம் ஆயத்தமாக்க எடுக்கும் முயற்சிகள் என்ன,
🔴நாம் செய்யும் செயல்களை முழு உள்ளத்தோடு அறிந்து தான் செய்கின்றோமா?
நிகழ்வு - 1
லியோ டால்ஸ்டாய் தன்னுடைய நூலில் ஒரு உண்மையை எடுத்தியம்புகிறார். பக்தன் ஒருவன் ஆண்டவரிடம் தினமும் வேண்டுவான். ஒரு நாள் இறைவன் அவன் முன் தோன்றினார். என்ன வேண்டும் என்றார், அதிகமான சொத்துக்கள் வேண்டும் என்றான் பக்தர். ஆகட்டும் என்றாா் இறைவன். ஆனால் ஒரு நிபந்தனை, நாளை காலை எழுந்து கையில் மண்வெட்டியுடன் வந்து ஓரிடத்தில் நில் அதிலிருந்து நீ எவ்வளவு தூரம் சென்று உன் மண்வெட்டியால் மண்ணை ஒருமுறை வெட்டுவாயோ அதுவரை உள்ள நிலம் முழுவதும் உனக்குச் சொந்தமாகும், ஆனால் மாலை 6:00 மணிக்குள் நீ பயணம் தொடங்கிய இடத்தில் வந்து நிற்க வேண்டும் என்றார். சரி என்றான் பக்தன். மறுநாள் காலையில் எழுந்து கையில் மண்வெட்டியுடன் ஓடத் தொடங்கினான் சொத்து சேர்க்கும் ஆர்வத்தில் ஓடிக்கொண்டே இருந்தான். உணவு உண்ணவில்லை, நீர் அருந்தவில்லை மதியம் வரை ஓடினான். இதுவரை உள்ள நிலம் தனக்குச் சொந்தம் என்று மகிழ்ந்தவன், தான் ஓடத் தொடங்கி இடத்தை நோக்கி ஓடத் தொடங்கினான். கொஞ்ச நேரத்திலேயே பசி, உடல் களைப்பால் சோர்ந்து வீழ்ந்து இறந்தான். வாய்ப்புகளை பயன்படுத்தத் தெரியாத மூடனாக, பேராசையால் வாழ்வை இழந்தான்.
நிகழ்ச்சி - 2 (ஊடகச் செய்தி)
ஆம்புலன்ஸ் மணி என்பவர் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சார்ந்தவர். தன் சகோதரன் விபத்துக்குள்ளாகி உயிருக்கு போராடிய போது ஆம்புலன்ஸ்க்கு அழைப்பு விடுத்தபோது, ஒருவரும் உரிய நேரத்தில் வராததால் தன் சகோதரனை இழந்தார். இதனால் தன் சொத்தை விற்று மூன்று ஆம்புலன்ஸ் வாங்கி அதை மக்கள் பயன்பாட்டிற்குப் பயன்படுத்தினார். கொரோனா காலத்தில் கிட்டத்தட்ட 65 நபர்களின் உயிர்கள் அவரால் காப்பாற்றப்பட்டது. கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 600- க்கு மேலான நபர்களை காப்பாற்றியுள்ளார். கொரோனா காலத்தில் ஆம்புலன்ஸிலேயே தங்கித் தன் பணியைச் செய்ததால் ஆம்புலன்ஸ் மணி என்று அழைக்கப்பட்டார்.
இரு நிகழ்வுகள்
(1) பேராசையால் வளமான வாழ்வுக்குக் கொடுக்கப்பட்ட வாய்ப்பை தவறவிட்ட மனிதன்.
(2) வாழ்வின் நிலையாமை உணர்ந்து தன் வாழ்வை பிறர் வாழ்வுக்காய் அர்ப்பணம் செய்த ஒரு ஏழை குடியானவன். நாம் எங்கு நிற்கின்றோம். இன்றைய வழிபாடு பல உண்மைகளை நமக்கு வெளிப்படுத்துகிறது.
1. இறைவன் யார்?
திபா . 98:9 "அவர் உலகிற்கு நீதி வழங்க வருகின்றார். பூவுலகை நீதியுடன் ஆண்டிடுவார். மக்கள் இனங்களை நேர்மையோடு ஆட்சி செய்வார்" என்று தாவீது ஆண்டவரை புகழ்ந்து, மகிழ்ந்து பாடுவார்.
🔴இறைவன், நீதியின் இறைவன், உண்மையின் இறைவன் நீதியோடு ஆட்சி செய்பவர்.
🟣திபா 94:4 "நீதியை நீர் விரும்புகின்றீர் நேர்மையை நிலைக்கச் செய்கின்றீர்" என்றாா். இந்த இறைவன் மேன்மையானவர், அஞ்சுதற்குரியவர்.
திபா . 99:3 "மேன்மையானதும், அஞ்சுதற்குரியதுமான அவரது பெயரை போற்றுங்கள்" என்று தாவீது இறைவனை புகழ்கின்றார். இறைவன் யார் என்று திருமறை நமக்கு உணர்த்துவது,
1. நீதியை விரும்புகின்றனர்
2. நீதி வழங்குகிறவர்
3. நீதியை நேர்மையோடு ஆள்பவர்
4. நேர்மையை நிலைக்கச் செய்கிறவர்
5. மேன்மையானவர்
6. அஞ்சுதற்குரியவர்.
எனவே இந்த இறைவனைப் போற்றி, புகழ்ந்து அவருக்கு உகந்தவர்களாக வாழ அழைக்கப்படுகின்றோம்.
2. இறைவனின் வருகையின் அறிகுறி
ஆண்டவர் வரும்போது, இயற்கையில் வாழ்வில் ஏற்படும் மாற்றங்களை இன்றைய வாசகங்கள் உணர்த்தி நிற்கின்றது.
இயற்கையில் ஏற்படும் மாற்றங்களாக
மாற்கு 13:24-26 "கதிரவன் இரண்டு விடும், நிலா ஒளி கொடாது விண்மீன்கள் வானத்திலிருந்து விழுந்த வண்ணமிருக்கும். வான்வெளிக் கோள்கள் அதிரும், அப்போது மிகுந்த வல்லமையோடும், மாட்சியோடும் மானிட மகன் மேகங்கள் மீது வருவதை காண்பீர்கள்" என்று ஏற்படும் மாற்றங்களை உணர்த்துகிறது. அதுபோன்று வாழ்வில் ஏற்படும் அதிர்வுகளை, மாற்றங்களை தானியல் நூல் விளக்குகிறது.
தானி 12:1 "மக்களினம் தோன்றியது முதல் அக்காலம் வரை இருந்திடாத துன்ப காலம் வரும்" என்று அறிய வருகின்றோம். இந்த இயற்கையில் வாழ்வியல் மாற்றங்களும், மனிதனை அச்சுறுத்தவோ, நிலைகுலையச் செய்யவோ அல்ல, மாறாக நீதியின், நேர்மையின் வழியில் அஞ்சுதற்குரியவரும், வணக்கத்துக்குரியவருமான இறை உறவில் நிலைபெறச் செய்யவே.
🔵ஆண்டவருக்கு அஞ்சி நடக்கும் போது ஆண்டவரின் தூதர் சூழ்ந்து நின்று நம்மைக் காத்திடுவார்.
🔵ஆண்டவருக்கு அஞ்சுவோருக்கு எக்குறையும் இராது.
🔵ஆண்டவருக்கு அஞ்சுவோரை எல்லா நெருக்கடிகளினின்றும் இறைவன் மீட்பார்.
திபா . 27:5 "கேடுவரும் நாளில் அவர் என்னை தன் கூடாரத்தில் மறைத்து வைப்பார். தம் கூடாரத்தினுள்ளே என்னை ஒழித்து வைப்பார். குன்றின் மேல் என்னை பாதுகாப்பாய் வைப்பார்" என்று இறைவனின் பாதுகாப்பை அறிவுறுத்துகிறார்.
🔴இயற்கையில் வாழ்வியலில் ஏற்படும் இந்த மாற்றங்கள் எல்லாம் நம்மை அச்சுறுத்துவதற்கு அல்ல மாறாக நமக்கு விழிப்பை ஏற்படுத்த
நம்மை ஆயத்தப்படுத்த நாம் செய்ய வேண்டியது:
அறிவாளிகள் ஆயத்தமாய் இருப்பர். அறிவிலிகள் ஆயத்தமின்றி, பொறுப்பின்றி, இறை ஞானமின்றி வாழ்வை விரயமாக்குவார்.
🔴பல நேரங்களில் மனிதராகிய நாம் அடையாளங்களை வாழ்வின் அர்த்தங்களை தவறாகப் புரிந்து கொள்கின்றோம்.
🔴இறுதி நேரம் குறித்து நம்பிக்கையோடு இருங்கள், விழிப்பாய் இருங்கள் என்று தான் இயேசு குறிப்பிடுகின்றாரேத் தவிர, பயப்படுங்கள் என்று கூறவில்லை
🔴நாம் மீட்பை பெற்றுக் கொள்ளவே இயேசு வந்தார், நாம் அழிவுற அல்ல.
🔴அன்பு, இரக்கம், கனிவு, தாழ்ச்சி போன்றவை இயேசுவின் போதனையின் இதயமாக அமைந்துள்ளது.
3. நம் செயல்பாடு என்ன?
🟢மானுட மகனின் வருகை நாட்களில் நாம் விழிப்போடு, ஞானத்தோடு செயல்படுதல் நம் கடனாகி போகிறது
🟢நீதி, நேர்மை உணர்வுகளை நாம் பார்க்க, வாழ்வாக்க வரவேண்டுவோம்.
🟢நம் கடமைகளை, விழிப்போடு, விரைந்து செயலாற்றும் மனப்பக்குவம் கொண்டு இருக்கின்றேனா?
🟢அன்பினால் மக்களின் தேவைகளில் உடனிருந்து உதவி புரிந்து பகிர்ந்து வாழும் நிலை, மானிட மகனின் வருகையின் ஆயத்த நிலையாகும்.
🟢தேவையில் உழல்வோரை இனம் கண்டு, சின்னஞ்சிறு உதவிகளால் உளம் மகிழ்ச் செய்யும் செயல் ஆயத்த நிலையாகும்.
🟢புனித ஜான் போஸ்கோ சொல்வார், "நான் விளையாடும் போது, ஆண்டவரின் தூதர், உலகம் அழியப் போகிறது என்றால் கூட நான் கலக்கமுறேன் ஏனெனில் எந்நேரமும் ஆயத்தமாய் இருக்கிறேன்" என்பார்.
இத்தகைய மனநிலையை பெற்று இறையரசுக்கு சான்று பகர்வோம்!
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.
👋👋👋👋👋👋👋👏👏
தேனருவி மீடியா
http://youtube.com/c/thenaruvimedia
Subscribe பண்ணுங்க.*
No comments:
Post a Comment