Friday, November 3, 2023

ஆண்டின் பொதுக்காலம் 31 - ம் ஞாயிறு மறையுரை -05.11.2023.

இறைச் சிந்தனை 

தேனருவி மீடியா

(பொதுக்காலம் 31- ஆம் வாரம் ஞாயிறு) 05.11.2023.

மலாக்கி 1 : 14-2:1-2, 8 - 10,

1 தெசலோனிக்கர் 2: 7- 9,13,

மத்தேயு  23: 1 - 12.

அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.

பணிவோடு நற்சான்று பகர்வோம்

♦️பழைய ஏற்பாட்டு குருக்களும், புதிய ஏற்பாட்டு பரிசேயர்களும், மறைநூல் அறிஞர்களும், மக்களுக்கு முன்மாதிரியான வாழ்வு வாழவும், அந்த வாழ்வுக்குரிய போதனைகளை வழங்கவும் அழைக்கப்பட்டவர்கள். ஆனால் அவர்கள் அத்தகைய எடுத்துக்காட்டான வாழ்வு வாழவில்லை.

♦️பழைய ஏற்பாட்டு காலத்தில் குருக்களை யாவே இறைவனும், புதிய ஏற்பாட்டில் பரிசேயர்களையும், மறைநூல் அறிஞர்களையும் இறைமகன் இயேசு எச்சரிக்கின்றார்.

♦️வெறும் பகட்டிற்காக, தங்களை பெருமைப்படுத்திக் கொள்ளும் வெளிவேடத்தனமான செயல்கள் இறைவனின் கோபத்திற்குள்ளாகின.

♦️எடுத்துக்காட்டான, ஒரு அர்ப்பண வாழ்வு வாழாவிட்டாலும், பிறருக்கு இடையூறான வாழ்வு வாழாதிருக்க இறைவன் அழைக்கிறார்.

♦️தற்பெருமை அழித்து, சுயநலம் துறந்து மற்றவர்களுக்கு பணிவோடு நற்செயல்களால் நற்சான்று பகர வழிபாடு அழைக்கிறது.

நிகழ்வு

அந்த ஊரின் ஆலய விழா மிகச்சிறப்பாக நடந்தது. விழாவின் உச்சமாக தேரோட்டம் அமைந்தது. ஊரின் எல்லா மக்களும், பக்கத்து ஊர் மக்களும், உறவுகளும் பெருங்கூட்டமாய் தேரோட்டத்தில் பங்கேற்றனர். தேரின் மேலமர்ந்து ஆண்டவர் அருள் பாலித்தார். வந்த கூட்டத்தினர் அனைவருக்கும் மிக்க மகிழ்ச்சி. அகமும், முகமும் மலர மகிழ்வோடு கலைந்து சென்றனர்.

விழா முடிந்தது தேரை ரோட்டோரம் அதற்கென்று உரிய இடத்தில் நிலை நிறுத்தினர். தேர் பாதுகாப்பாக, ரோட்டோரம் நின்றது. குப்பை அள்ளும் லாறி, தேரின் அருகில் வந்து நின்றது. நீண்ட நேரம் தேரை உற்று நோக்கியது. தேர், குப்பை சுமக்கும் லாறியிடம் கேட்டது, என்ன பார்க்கிறாய்? என்று

குப்பை சுமக்கும் லாறி தேரின் அருகில் மீண்டும் வந்தது. குப்பை லாறி, தேரிடம் கேட்டது, நான் எல்லா நாளும் காலையில் இந்தப் பகுதிக்கு வருகிறேன். இந்தப் பகுதி தூய்மையாய் இருப்பதற்கு உதவுகிறேன். என்னை யாரும் மதிப்பதில்லை ஆனால் வருடம் முழுவதும் இந்த இடத்தில் வெறுமனே கிடந்துவிட்டு, ஒரு நாள் நீ உலா வருகிறாய், எல்லாரும் உன்னை வணங்கி நிற்கிறார்களே. என்ன பாரபட்சமான உலகம் இது என்று தன் ஆதங்கத்தைச் சொல்லியது.

தேர் மெதுவாக புன்முறுவல் செய்தது. பிறகு சொன்னது, நீ சொல்வது முற்றிலும் உண்மை. நீ தினமும் வருகிறாய், நான் வருடத்தின் ஒரு நாள் தான் வருகிறேன். தினமும் நீ வருவதாலோ, அல்லது வருடத்திற்கு ஒருமுறை நான் வருவதானாலோ மக்கள் நம்மை மதிப்பதில்லை. மாறாக நம்முள் என்ன இருக்கிறது, எதை நாம் சுமந்துச் செல்கிறோம் என்பதை பொறுத்து தான் மக்கள் நம்மை மதிப்பார்கள்.

தேராகி நான் தெய்வத்தை சுமந்து வருகிறேன் மக்கள் வணங்குகிறார்கள். நீ கழிவை, குப்பைகளை உன்னுள் சுமக்கிறாய் மக்கள் உன்னை மதிப்பதில்லை. எனவே மதிப்பும், மரியாதையும் நாம் எத்தகையவற்றைச் சுமக்கிறோம், என்பதைப் பொறுத்து தான் என்று தேர் சொன்னது.

இன்றைய நற்செய்தியில் பரிசேயர்கள், மறைநூல் அறிஞர்கள், முதல் வாசகத்தில் குருக்கள், தங்களை நீதிமான்களாக, பக்திமான்களாக, நிறை ஞானமிக்கவர்களாகக் காட்டிக்கொள்ள முனைகிறார்கள். ஆனால் அவர்கள் உள்ளத்திற்கும், அவர்களின் செயல்பாட்டிற்கும் வேறுபாடு நிறைந்திருந்தது. நீதிமொழி 21:4 "மேட்டிமையானப் பார்வை, இறுமாப்புக் கொண்ட உள்ளம் இவை பொல்லாரிடம் பளிச்சென்று காணப்படும் பாவங்கள்" என்று அறிவுறுத்தியது போல் பரிசேயர், மறைநூல் அறிஞர், குருக்கள் விளங்கினர். இன்றைய முதல் வாசகம், மலாக்கி இறைவாக்கு நூலில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.

இந்நூல் ஒரு தனித்தன்மை வாய்ந்தது. ஆண்டவர் அல்லது இறைவாக்கினர் ஒரு நற்செய்தியைக் கூற, மக்கள் அல்லது குருக்கள் அதை ஏற்க மறுப்பார்கள். ஆண்டவர் அச்சுறுத்தி, மீட்பின் செய்தியை வழங்குவதாக அமைகிறது.

விண்ணக சேனைகளுக்குத் தலைமை தாங்குகிறவரும், இஸ்ரயேல் மக்களையும் படைகளையும் வழி நடத்துகிறவராகி இறைவனை  மலாக்கி 1:14 "நானே மாவேந்தர்" "படைகளின் ஆண்டவர்" என்று இறைவாக்கினர் கடவுளின் மாட்சியை விளக்குகிறார். 

இஸ்ரயேல் மக்களும், குருக்களும், ஆண்டவருக்கு செலுத்த வேண்டிய காணிக்கைகளை முறைப்படி செலுத்தாமலும் ஆண்டவரின் கட்டளைகளைக் கடைபிடிக்காமலும் ஆண்டவரின் திருப்பெயரை அவமதித்தும், களங்கப்படுத்தியும் வாழ்ந்தனர். இச்சூழலில் தான் ஆண்டவர் இறைவாக்கினார் மலாக்கி வழி எச்சரிக்கை வழங்குகிறார்.          இ.ச 4:39 "மேலே விண்ணிலும் கீழே மண்ணிலும் ஆண்டவரே கடவுள் அவரைத் தவிர வேறு எவரும் இலர்" என்று ஆண்டவரால் அறிவுறுத்தப்பட்டும் இஸ்ரயேலர் ஆண்டவரின் திருப்பெயரை அவமதித்தனர். எனவே இரவாக்கினர் வழி

மலாக்கி 2:1 "குருக்களே உங்களுக்கு நான் தரும் கட்டளை இதுவே என் பெயருக்கு மாட்சி அளிக்க வேண்டும் என்பதை உங்கள் இதயத்தில் பதித்துக் கொள்ளுங்கள்"

மலாக்கி 2:2 "எனக்கு நீங்கள் செவி கொடுக்காவிடில் உங்கள் மேல் சாபத்தை அனுப்புவேன்" என்று எச்சரித்தார். ஏனெனில் குருக்கள்

♦️நெறிதவறி நடந்தார்கள்.

♦️தவறான போதனையில் பலரை இடறி விழச் செய்தார்கள்.

♦️கடவுள் இஸ்ரயேல் மக்களோடு ஏற்படுத்திய உடன்படிக்கையைப் பாழாக்கினார்கள். 

எனவே அவர்களை எச்சரித்தார் இறைவன். இந்த இறைவன் எப்படிப்பட்டவர் எனில் திபா 45:7 "நீதியே உமது விருப்பம், அநீதி உமக்கு வெறுப்பு" என்றும் திபா47:2 "உன்னதராகிய ஆண்டவர் அஞ்சுதற்குரியவர். உலகம் அனைத்தையும் ஆளும் மாவேந்தர் அவரே" என்றும் திருமறை அறிவுறுத்துகிறது. எனவே அவரின் குரலுக்கு செவி மடுக்கும் மக்களினமாக மாற இறைவாக்கினர் அழைக்கிறார்.

இன்றைய நற்செய்தியில் யூத மதத்தின் போதகர்களாக, தலைவர்களாக அறியப்பட்ட மறைநூல் அறிஞரும், பரிசேயரும், முரண்பட்ட வாழ்வு வாழ்ந்தபோது இயேசு, இவர்களின் நடைமுறையை பின்பற்ற வேண்டாம் என எச்சரிக்கின்றார்.

மத்தேயு 23:3 "அவர்கள் செய்வதுபோல் நீங்கள் செய்யாதீர்கள் ஏனெனில் அவர்கள் சொல்வார்கள், செயலில் காட்ட மாட்டார்கள்" என்றார். பரிசேயர், மறைநூல் அறிஞர்களின் செயல்பாடுகள் எவ்வாறு இருந்தது எனில்

🔴சொல்வதை செய்யமாட்டார்கள்.

🟡சட்டத்தின் பெயரால் வலுவான சுமைகளை மக்கள் மேல் சுமத்தினார்கள். செய்கிற வேலை மக்கள் பார்க்க வேண்டும் என வெளிவேடமாக செய்வார்கள்.

🟢வாசகப் பட்டைகளை அகலமாக்கினார்கள்.

🔵அங்கிகளில் குஞ்சங்களைப் பெரிதாக அணிந்தார்கள்.

🟣விருந்துகளிலும், தொழுகைக்கூடகங்களிலும் முதன்மையான இடங்களில் அமர்வர்.

🟡மக்கள் எல்லாரும் அவர்களுக்கு வணக்கம் செலுத்த வேண்டும் என்று விரும்பினர்.

அதோடு, பரிசேயர்கள், மக்கள் தங்களை ரபி, போதகர், தந்தை, ஆசிரியர் என்றப் பெயர்களால் அழைக்கப்பட விரும்பினார்கள். இப்பெயர்களினால் அழைக்கப்படுவதை கௌரவமாக நினைத்தார்கள்.

ஆனால் ஆண்டவர் இயேசு பரிசேயர், மறைநூல் அறிஞர் இவர்களின் இதயத்தூய்மை அற்றநிலை, முன்னுக்குப் பின் முரணான, போலியான வாழ்வு, மக்களை தவறான வழிகளில் நெறிப்படுத்தியதைக் கண்டு வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே! பரிசேயரே! உங்களுக்கு கேடு என்று எச்சரித்தார். குருட்டு வழிகாட்டிகள் என்று எதிர் முழக்கமிட்டார்.

மக்கள் உங்களை மதிப்பதும், வணக்கம் செலுத்துவதும், உங்களை போதகரே, ரபி, ஆசிரியர் என்று அழைப்பதும் உங்கள் ஆடை, ஆடம்பரங்களை வைத்து அல்ல மாறாக உங்கள் உள்ளத் தூய்மையினாலும், புனிதமான செயல்பாடுகளாலும் நிகழ வேண்டும்.

உங்கள் பணிகள் மக்கள் பாராட்ட வேண்டும் என்று அமைவதை விட, ஆண்டவர் பார்வையில் அது மதிப்பிற்குரியதாய், உயர்ந்ததாய் அமைய வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

தாழ் நிலையில் நின்ற தம் அடிமையைக் கண்ணோக்கி செருக்குற்றோரைச் சிதறடித்த இறைவன், பரிசேயர்களையும், மறைநூல் அறிஞர்களையும் எச்சரித்தார்.

லூக்கா 16:15 "நீங்கள் உங்களை மக்கள் முன் நேர்மையாளராக காட்டிக் கொள்கிறீர்கள். கடவுள் உங்கள் உள்ளங்களை அறிவார். நீங்கள் உங்களை மக்கள் முன் உயர்ந்தவர்களாக காட்டிக்கொள்வது கடவுள் பார்வையில் அருவருப்பாகும்" என்று இயேசு பரிசேயர்களுக்கு அறிவுறுத்தினார். எனவே பணிவான உள்ளத்தோடு, நல்ல சிந்தனையோடு, நல்ல செயல்பாடுகளால் நாம் ஆபிரகாமின் பிள்ளைகள் என்பதை எண்பிப்போம்.

நம் வாழ்வில்

🟢வீண் ஆடம்பரத்தில் புதையுண்டுக் கிடக்கிறேனா?

🟣வெளிவேடமான வாழ்வு வாழ்கிறேனா?

🔴சட்டத்தின் காவலர்களாக நம்மை காட்டிக் கொள்கிறோமா?

🔵போலியான வாழ்வில் புழகாங்கிதம் அடைகிறேனா?

🟡நம் சிந்தனையும், செயலும் ஒன்றாய், நன்றாய் அமைகிறதா?

சிந்திப்போம்!

நற்சான்றுப் பகர்வோம்!

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.

👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋

தேனருவி மீடியா

http://youtube.com/c/thenaruvimedia

Subscribe பண்ணுங்க.*

No comments:

Post a Comment