Friday, December 29, 2023

திருக்குடும்பத் திருவிழா மறையுரை -31.12.2023. (ஞாயிறு)

இறைச் சிந்தனை 

தேனருவி மீடியா

திருக்குடும்பத் திருவிழா

31.12.2023.

தொ.நூ 15 : 1 - 6,  21:1-3,

எபி 11: 8, 11 - 12, 17 - 19, 

லூக்கா 2: 22 - 40.

அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.

அன்பு, அறம் இவற்றின் விளைநிலம் - குடும்பங்கள்

🟣நல்ல குடும்பம் என்பது இறைவன் நேரடியாக உருவாக்கிக் கொடுப்பதல்ல. மாறாக குடும்ப உறுப்பினர் அனைவரின் கூட்டு முயற்சியின் விளைவு.

🟡இயேசு, மரி, சூசை ஆகிய மூவரும் அருள் நிலையில் எப்போதும் கடவுளோடு இணைந்து வாழ்ந்ததால் திருக்குடும்பம் என்கிறோம்.

🔵மிக எளிமையாக, மறைவாக வாழ்ந்த நாசரேத்தூர் திருக்குடும்பம் நமக்கு எடுத்துக்காட்டான குடும்பமாய் திகழக்காரணம் அக்குடும்பம், புனிதத்தில் தழைத்தது, உண்மையான அமைதி ஊற்றெடுக்கும் இடமாகவும், ஒற்றுமை, உறவு ஆகிய புண்ணியங்களின் பிறப்பிடமாகவும் திகழ்ந்தது.

🟢உலகின் மற்ற குடும்பங்களைப் போல், இயேசு, மரி, சூசையின் குடும்பமும் ஒரு சாதாரண குடும்பம் தான். நம்மைப் போல் இணைந்து வாழ்ந்து, உழைத்து, பேசி, சிரித்து, கவலை, மகிழ்ச்சி என்ற உணர்வுகளை அனுபவமாக்கிய குடும்பம் தான் திருக்குடும்பம்.

🔴அருள்நிறைந்த மரியாவும், நேர்மையாளர் யோசேப்பும், உன்னத கடவுளின் மகனாகிய இயேசுவும் இணைந்து உருவாக்கிய குடும்பம் திருக்குடும்பம்.

🟣உலகின் எல்லா குடும்பங்களுக்கும் சிறந்த முன்னுதாரணம் இக்குடும்பம். இதில் உயிரூட்டமாய் நிலை பெற்ற இறை திருவுள்ளத்தை ஏற்றல், தாழ்ச்சி, அன்பு, பொறுமை, எளிமை ஆகிய பண்புகளை திருக்குடும்பமாய் நம்மை உருமாற்ற அழைக்கிறது வழிபாடு.

நிகழ்வு

2017 - அக்டோபர் மும்பையைச் சார்ந்த நித்துராஜ் தான் பணியாற்றும் அமெரிக்க ஐக்கிய நாட்டிலிருந்து மும்பைக்குத் தன் சொந்த ஊருக்கு வருகிறார். அமெரிக்காவில் ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றுகிறார். தந்தை இறந்த பிறகு தாய் கடினப்பட்டு, சிரமத்தோடு - நித்துவை படிக்க வைத்தார். தாய் மட்டுமே வசிக்கும் வீட்டிற்குச் சென்று அழைப்பு மணியை ஒலிக்கிறார். பலமுறை ஒலித்தும் எந்த பயனுமில்லை. அம்மா! அம்மா! என்று அழைத்துப் பார்க்கிறார். ஆரவாரமில்லை, கதவும் திறக்கப்படவில்லை. கதவை உடைத்து உள்ளே சென்றுப் பார்க்கிறான் அங்கே, அவனைப் பெற்று, வளர்த்து, ஆளாக்கி, வெளிநாட்டுக்கு அனுப்பிய தாய் ஹாலில் எலும்பு கூடாய் கிடக்கிறாள். 2016 - ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தான் தன் தாயிடம் கடைசியாக நித்து பேசினாராம். ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுகளாக பேசவில்லை என்கிறார்.

இத்தனைத் தொழில்நுட்பங்கள், அறிவியலின் அபார வளர்ச்சி இருக்கிற இந்த காலத்தில், ஐ.டி -ல் பணி புரியும் ஒரு நபரால் தன்னை உருவாக்கி, பட்டினி கிடந்து ஆளாக்கிய தாயிடம் பேசாமல் இருக்க முடிகிறது என்றால் நம் குடும்ப உறவுகள் எங்கேப் போய்க் கொண்டிருக்கிறது.

அப்படி என்ன வாழ்வை வாழ்வாக்குகிறோம்.

மனித உணர்வுகளையும், உறவுகளையும், உணர்ச்சிகளையும் கொன்றுவிட்டு யாருக்காக உழைக்கின்றோம்.

கோடி கோடியாய் சம்பாதிக்கக் கற்றுக் கொடுக்கிற நாம், உறவுகளைச் சொல்லிக் கொடுக்கவும், உணர்ச்சிகளின் மதிப்பைச் சொல்லிக் கொடுக்கவும், அன்பின் ஆழத்தைச் சொல்லிக் கொடுக்கவும், அற வாழ்வின் தேவை உணர வைக்கவும், தவறிப்போகின்றோம்.

குடும்பங்கள் அன்பையும், அறத்தையும், பண்பையும் சொல்லிக் கொடுக்கவில்லை எனில் குடும்பங்கள் பாலைவனமாகி போகும்.

இதற்கு நேர் மாற்றான ஒரு குடும்பமாக, ஒரு முன்மாதிரியான குடும்பமாக திருக்குடும்பம் திகழ்ந்தது. திரு குடும்பத்தின் ஆணிவேர் இறையச்சமும், இறைநம்பிக்கையும், பொறுமை, தன்னலமற்ற அன்பு, கனிந்த இதயம், மன்னிக்கும் மனம், வாழ்வு வழங்கும் தியாகம், உயிரினும் மேலான நேர்மை, ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுத்தல், நான் பிறருக்காக வாழ்கின்றேன் என்ற மதிப்பீட்டு வாழ்வு நிலைபெற்றது.

இன்றைய முதல் வாசகத்தில் கடவுளின் வாக்குறுதி, ஆபிரகாமின் நம்பிக்கையில் நிறைவேறுவதை எடுத்தியம்புகிறது. நம்பிக்கையில் உறுதியாய் நிலைத்து நின்ற ஆபிரகாமிற்கு ஆண்டவர் தொ.நூ. 15:1 "ஆபிரகாம் அஞ்சாதே நான் உனக்கு கேடயமாக இருப்பேன். உனக்குப் பெரும் கைமாறு கிடைக்கும்" என்று வாக்குறுதி கொடுக்கிறார். 

ஆபிரகாம் விசுவசித்தார். எனவே அவர் விசுவாசத்தின் தந்தையானார். அந்த உறுதியான விசுவாசத்தை ஆண்டவர் நீதியாக கருதினார். தொ.நூ. 15:6 "ஆபிரகாம் ஆண்டவர் மீது நம்பிக்கை கொண்டார் அதை ஆண்டவர், அவருக்கு நீதியாக கருதினார்" ஆபிரகாம் கொண்டிருந்த அதே நம்பிக்கையை, கிறிஸ்தவர்களாகிய நாம் கொண்டிருக்க வேண்டும் என தூய பவுல்  அறிவுறுத்துகிறார். நாம் கொள்ளும் விசுவாசம் நம் செயல்களில் வெளிப்பட வேண்டும், நம் வாழ்வியல் நெறிகளில் புலப்பட வேண்டும். கலா. 5:6 "அன்பின் வழியாய் செயலாற்றும் நம்பிக்கை ஒன்றே இன்றியமையாதது" என்று தூய பவுல் அறிவுறுத்தினார். அன்பான, செயலாற்றல் - நம்பிக்கையின் வெளிப்பாடு ஆபிரகாம் ஆண்டவர் மீது தான் கொண்ட நம்பிக்கையை தன் செயல்களால் எண்பித்தார்.

🟣ஆண்டவரின் கூற்றுப்படி தன் சொந்த நாட்டை விட்டு வெளியேறி ஆண்டவர் காட்டிய நாட்டில் குடியேறினார் (தொ.நூ. 12: 1 - 2)

🔴வயதான காலத்தில் குழந்தையற்ற சூழலில், வானத்து விண்மீன்களைப் போல் உன் சந்தததியை பெருக்குவேன் என்ற போது அதை உறுதியாக நம்பினார். (தொ.நூ . 15:6)

🟢வயதான காலத்தில் வாக்குத்தத்தமாய் வழங்கிய மகனை பலியிட கேட்டபோது ஆபிரகாம் இசைந்தார்  (தொ.நூ. 22) 

இவை ஆபிரகாமின் விசுவாச வாழ்வின் வெளிப்பாடுகள் ஆகும்.

இன்றைய இரண்டாம் வாசகமும் ஆபிரகாம், சாரா ஆகியோரின் விசுவாச வாழ்வை நமக்கு உறுதிப்படுத்துகிறது.

இன்றைய நற்செய்தி திருச்சட்டங்களை நிறைவேற்றும், கடவுளுக்கு அஞ்சும் ஒரு யூத குடும்பத்தின் செயல்பாடுகளை திருக்குடும்பம் வழி உணர்த்துகிறது.

சட்டங்களை - கடைப்பிடிப்பதில்தான் நம்பிக்கை புலப்படும்.

குழந்தையை கடவுளுக்கு அர்ப்பணம் செய்ய சூசையும், மரியாவும் எருசலேமுக்கு வருகின்றனர். தூய்மைச்சடங்கை நிறைவேற்றுகின்றார்.

லூக்கா 2:23 "ஆண் தலைப்பேறு அனைத்தும் ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்படும்" அர்ப்பணிக்கப்பட்ட குழந்தைக்கு தூய்மைச் சடங்கு நிறைவேற்ற ஏழையான சூசை - மரியாய் இருவரும் இரு மாடப் புறாக்களை குருவிடம் வழங்குகிறார்கள். ஒன்றைத் தகனப்பலியாகவும், மற்றொன்றை பரிகார பலியாகவும் ஒப்புக்கொடுத்தனர். இந்நிகழ்வு ஒரு யூதன் மோசே சட்டப்படி செய்ய வேண்டிய எல்லாவற்றையும் குறைவின்றி செய்தனர் சூசை - மரியா தம்பதியினர் என்பதை உணர்த்துகிறது.

இவ்வாறு எருசலேம் ஆலயத்தில் சட்ட முறைகளை நிறைவேற்ற சென்றபோது, அங்கு நேர்மையாளரும் இறைப்பற்றுக் கொண்டவரும் ஆண்டவர் மெசியாவை காணும் முன் சாவதில்லை என்று தூய ஆவியால் உணர்த்தப்பட்ட சிமியோனும்.

அல்லும் பகலும் இறைவனை செய்தவரும், நோன்பிருந்து மன்றாடும் ஆசேர் குலத்தைச் சார்ந்த "அன்னா" என்ற இறைவாக்கினரும் மீட்பராம் இயேசுவைக் கண்டனர்.

பாலன் இயேசுவை குறித்து சிமியோன் இறைவாக்குரைக்கின்றார்.

🟢மக்கள் அனைவரும் காண தந்தை கடவுள் அனுப்பிய மீட்பு இயேசு.

🔴பிற இனத்தாருக்கு வெளிப்பாடு அருளும் ஒளி.

🟣இக்குழந்தை இஸ்ரயேலரின் வீழ்ச்சிக்கும், எழுச்சிக்கும் காரணமாக அமையும்.

🟡எதிர்க்கப்படும் அடையாளமாய் இருப்பார்.

🔵மரியாவின் உள்ளத்தை வியாகுலம் ஊடுருவும் என்றுரைத்தார்.

தூய்மைச் சடங்கை முடித்த பின் சூசை,மரியா, இயேசு அவர்களின் சொந்த ஊரான நாசரேத்தூர் சென்று தம் அன்றாட எளிய, தூய, வாழ்வு வாழ்ந்தனர்.

♦️♦️நேர்மையாளராகிய சூசைத் தலைவராகவும்,

♦️♦️அருள் மிகப் பெற்ற மரியாவை தலைவியாகவும்

 கொண்ட குடும்பத்தில் தூய ஆவியால் பிறந்த குழந்தையாகிய இயேசு எல்லாருக்கும் உகந்த பிள்ளையாய் விளங்கினார்.

லூக் 2:62 "இயேசு ஞானத்திலும் உடல் வளர்ச்சியிலும் மிகுந்து கடவுளுக்கும், மனிதருக்கும் உகந்தவராய் வாழ்ந்து வந்தார்" என்று லூக்கா விளக்குகிறார்.

நம் குடும்பங்களில்


🔵பெற்றோர் பிள்ளைகளுக்கு சிறந்த விசுவாசத்தின் முன்மாதிரியாக விளங்குகிறார்களா?

🟡குடும்பத்தில் கனிவான சொற்களால் உரையாடுகிறோமா?

🟣குடும்பங்கள் நற்பண்புகளின் விளைநிலமாக அமைகிறதா?

🔴நேர்மையான அறசெயல்களைச் செய்ய பயிற்றுவிக்கின்றோமா?

🟢பிறர் நலம் பேணும் தூய அன்பு உள்ளத்தில் ஊற்றெடுக்கிறதா?

🔵மன்னிக்கும் மாண்பை பிள்ளைகளுக்கு வாழ்வாக்கச் சொல்லிக் கொடுக்கிறோமோ?

 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.

👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋

தேனருவி மீடியா

http://youtube.com/c/thenaruvimedia

Subscribe பண்ணுங்க.*

No comments:

Post a Comment