Tuesday, March 26, 2024

புனித வியாழன் மறையுரை -28.03.2024.

👉 இறைச் சிந்தனை 

தேனருவி மீடியா

புனித வியாழன்

28.03.2024

விப 12 : 1 - 8, 11-14,

1கொரி 11 : 23 - 26, 

யோவான் 13: 1 - 15 .

அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.

நற்கருணை - அன்புறவு

♦️நற்கருணை  -  அன்பின், தியாகத்தின், பகிர்வின், அடையாளம்

♦️அன்பு என்றாலே அது கிறிஸ்துவின் அடையாளம். எனவே கிறிஸ்தவ அன்பிற்கென்று ஒரு தனித்தன்மை உண்டு.

♦️இயேசு அப்பமாக உடலையும், உயிராகிய இரத்தத்தையும் ஈந்து தான், புதிய உடன்படிக்கையை நிலைநிறுத்தினார்.

♦️எனவே இயேசுவின் அன்பு என்பது, தன்னலமற்ற, தியாகத்தின் அன்பு. இத்தகைய அன்பைத்தான் நாம் வாழ்வாக்க அழைக்கப்படுகின்றோம்.

♦️நற்கருணையிலும், பணியிலும், பாதம் கழுவுதல் வழியாகவும் புதிய இலக்கணத்தை வகுத்தார்.

♦️திருமுழுக்கின் வழியாக இயேசுவின் பணிக் குருத்துவத்திலும், பொதுகுருத்துவத்திலும் பங்குபெறும் நாம், அவருடைய அன்பிலும் பங்கு பெற்று, பிறருக்கு கிறிஸ்துவின் அன்பை வழங்க முன்வரவேண்டும்.

🔴அன்பு என்பது - வல்லமை, ஆற்றல், ஆக்கம்

🔴அன்பு - வாழ்வுக்கு பொருள் கொடுக்கும்

🔴அன்பு - விவரிக்க இயலா அனுபவம்

நிகழ்வு

1951 - ஆம் ஆண்டு "ரீடர்ஸ் டைஜஸ்ட் " என்ற  ஆங்கில பத்திரிகை வெளியிட்ட ஒரு செய்தி.

இங்கிலாந்தில் "டின்டோ" என்ற மிகப்பெரிய நகைக்கடை, அங்கு ஒரு நாள் ஒரு நான்கு வயது உள்ள குழந்தை உள்ளே நுழைந்தாள். சற்று நேரம் அங்கு இருந்த நகைகளை உற்று நோக்குகிறாள். பின்னர் அந்த நகைகடையின் உரிமையாளர் "பீட்" என்பவரைப் பார்க்க விரும்புவதாகக் கூறினாள். அவரிடம் அழைத்துச் சென்றனர். அந்த நான்கு வயது சிறுமி, கடை உரிமையாளரிடம் ரத்தினகற்கள் பதிக்கப்பட்ட மாலைகள் பார்க்க வேண்டும் என்றாள். அவரும் அக்குழந்தைக்கு பல ரத்தின மாலைகளை எடுத்துக்காட்டினார். சற்று நேரம் பார்த்த பின்பு தான் விரும்பிய மாலையைத் தேர்வு செய்தாள். பின் அதை பார்சல் செய்யச் சொன்னாள்.

கடை உரிமையாளர், அக்குழந்தையிடம் இதை யாருக்கு வாங்குகிறாய் என்றுக் கேட்டார். என் அக்காவிற்கு என்று குழந்தை பதில் சொன்னது. குழந்தைத் தொடர்ந்தாள். எனக்கு அப்பா, அம்மா இல்லை. எனக்கு அப்பாவும், அம்மாவும் என் அக்கா தான் நாளை மறுநாள் என் அக்காவிற்கு பிறந்தநாள். எனவே என் அக்காவின் அன்பிற்கும், அவரின் தியாகத்திற்கு ஈடாக இந்த மாலையைப் பரிசளிக்கப் போகிறேன் என்றாள். இதற்கான விலையை யார் கொடுப்பார்கள் என்று அந்த உரிமையாளர் கேட்க, தன் கையில் வைத்திருந்த கைகுட்டையை அவரின் மேசை மீது போட்டாள். அதில் "12 சென்ட்" காசுதான் இருந்தது. ஆனால் அவர் தேர்வு செய்த மாலை அன்றே பல நூறு டாலர் மதிப்புள்ளது. ஆயினும் பிஞ்சுக் குழந்தையின் உள ஆவலையும், தூய அன்பையும் உணர்ந்த கடைக்காரர் கொடுத்து அனுப்பினார்.

மறுநாள் காலை அச்சிறுமி அக்கா, அவளும் குழந்தை தான் ஏழு வயதிருக்கும், அந்தக் கடைக்குச் சென்று இவள் இதை வாங்கியது உண்மையா? என்று கேட்டாள். அவர், அவள் வாங்கியது உண்மைதான். ஆனால் அவளுக்கு இதன் விலை புரியாது. மாறாக அக்குழந்தையின் தூய அன்பிற்கு முன் இது ஒன்றும் பெரிதில்லை. உன் தங்கை உன் மேல் வைத்துள்ள அன்பு விலை மதிப்பற்றது. அதை ஈடு செய்ய முடியாது என்றார்.

இன்றைய நாள் விழாவும் இயேசுவின் எல்லையற்ற அன்பை மூன்று கோணங்களில் புலப்படுத்துகிறது.

நற்கருணை

நற்கருணை - நல்ல + கருணை (இரக்கம்)

இயேசு நம்மை நேசித்ததன் மொத்த அன்பின் வெளிப்பாடு நற்கருணை.

இயேசுவின் பணிவாழ்வில் பரிவாய், இரக்கமாய் , மன்னிப்பாய் வெளிப்பட்டது அன்பு. இப்போது நற்கருணையாய் வெளிப்படுகிறது.

யோவான் 13:1 "உலகில் வாழ்ந்த தமக்குரியவர் மேல் அன்பு கொண்டிருந்த அவா் அவர்கள் மேல் இறுதிவரையும் அன்பு செலுத்தினார்" இந்த அன்பின் வெளிப்பாடு தான் நற்கருணை.

1 கொரி 11:24 "இயேசு அப்பத்தை எடுத்து கடவுளுக்கு நன்றி செலுத்தி அதை பிட்டு இது உங்களுக்கான என் உடல்" என்றாா்.

இயேசு தன்னை உடைத்ததால், நாம் வாழ்வு பெற்றோம் இயேசு தன்னை பகிர்ந்ததால் நாமும் அவரைப் போல் பகிர அழைக்கப்படுகின்றோம்.

ஒருவேளை உணவிற்காக, தன் உறவுகளை, தன் மனிதத்தை சிதறடித்து வாழும் மானுடர் நடுவில், அன்புக்காக உறவுக்காக தன்னை நிறைவாழ்வு தரும் உணவாக்கினார் இயேசு. 

யோவான் 6:51, 58 "விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார். எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன். அது உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன்" என்றார்.

நற்கருணை ஒரு சமத்துவ விருந்தாகிறது. எல்லாரும் ஒன்றாகி, நன்றாக, வேற்றுமை களைய தன்னை உணவாக்கினார். பிறர் வாழ்வடைய தன்னை உணவாக உடைத்தார்.

யோவான் 15:13 "தன் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதை விட சிறந்த அன்பு யாரிடமும் இல்லை" என்று இயேசு நமக்காக தன்னைப் பலியாக்கி, உணவாக்கினார்.

தொடக்க கால திருஅவை நற்கருணையை மையப்படுத்திய சமூகமாக அமைந்தபோது அது

அனைவரின் நல்லெண்ணத்தைப் பெற்றது.

கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர்.

அந்த இறை சமூகம் வளர்ந்தது. ஏனெனில் அந்த சமூகத்தில், பகிர்வு, அக்கறை, புரிதல் உள்ள அன்புடை சமூகமாக நற்கருணை சமூகம் இருந்தது.

2. குருத்துவம்

திபா 110:4 "மெல்கிசேதேக்கின் முறைப்படி நீர் என்றென்றும் குருவே"

🟡இயேசுவின் குருத்துவம் சற்று உயர்வானது, மாறுபட்டது.

🔴ஏனெனில் இயேசுவே குருவும், பலிபீடமும், பலிப்பொருளுமாய் விளங்கினார்.

🟢நித்திய குருவாய் இயேசு, தன்னையே பலிப்பொருளாய் மாற்றி, நமது பாவம் போக்கும் பலியாகத் தன்னை ஒப்புக் கொடுத்தார்.

மத்தேயு 26:28 "பலருடைய பாவ மன்னிப்புக்காகச் சிந்தப்படும் இரத்தம்" நம் பாவம் போக்க இயேசு பாவம் போக்கும் பலியாக மாறினார்.

🔴பழைய ஏற்பாட்டில் குருக்கள் செம்மறியை பலியாக ஒப்புக்கொடுத்தனர்.

🟣புதிய ஏற்பாட்டில் செம்மறியாகி கிறிஸ்து தன்னை பலியாக்கினார்.

🟡பழைய ஏற்பாட்டில் அடிமையில் இருந்து விடுதலை வாழ்வுக்குக் கடந்தனர்.

🔴புதிய ஏற்பாட்டில் பாவத்தழைகளை ஒழித்து புது வாழ்வு பெற்றோம்.

குருத்துவ பணிவாழ்வின் மனநிலை

பிலிப்பியர் 2:5 "கிறிஸ்து இயேசு கொண்டிருந்த மனநிலையே உங்களிலும் இருக்கட்டும்" என்று தூய பவுல் அறிவுறுத்துகிறார்.

கிறிஸ்துவின் மனநிலை என்ன?

தாழ்ச்சி - வார்த்தை மனு உருவானது (நம்முள் ஒருவராய் வந்தது)

எளிமை - வெறுமையாக்கி, அடிமையாக்கி, மனிதருக்கு ஒப்பாகக் கருதப்பட்டது.

தந்தைக்கு கீழ்ப்படிதல் - சிலுவைச் சாவை ஏற்கும் அளவிற்கு தன்னைத் தாழ்த்தியது. அவரின் கீழ்படிதல்.

பணி அர்ப்பணம் உடையவராய் விளங்கியதைப் போல் குருத்துவ பணியாற்ற அழைக்கப்படுகின்றோம்.

எந்த நேரம் இயேசுவை மக்கள் சந்தித்தனர்

🔵நிக்கோதேம்  - நள்ளிரவில் - சந்தித்தார்

🔵தொழு நோயாளர் - ஊருக்கு புறம்பே - சந்தித்தார்

🔵சமாரியப்பெண் - பாவியாக கருதப்பட்டவள் - சந்தித்தார்

🔵கானா திருமணத்தில் - சாமானியர்கள் சந்தித்தனர்

🔵எருசலேம் ஆலயத்தில் - மறைநூல் அறிஞர்கள் சந்தித்தனர்.

♦️இயேசுவின் பணி குருத்துத்தில் கால அட்டவணை இல்லை இயேசு பகுதி நேரம் பணியாளர் அல்ல. எல்லாருக்கும் எல்லாமாய், எப்பொழுதுமானவர். அந்தக் குருத்துவத்தை வாழ்வாக்கத்தான் அழைக்கப்படுகின்றோம்.

♦️இயேசுவின் பணி குருத்துவம் பரிவிரக்கம் நிறைந்த பணியாக இருந்தது. தேவை அறிந்து உதவுவது குருத்துவம். போதனையைக் கேட்க வந்த மக்கள் மீது பரிவு கொண்டு நோய்களை நீக்கி, அப்பம் பலுகச் செய்து உடல் பசியை போக்கினார் (மத் 14:13-21)

♦️ஆன்ம தாகம் கொண்ட சக்கேயுவை அழைத்து, அவனை மாண்புறச் செய்து அவன் ஆன்ம பசியை போக்கிய போது புது மனிதனாகி மீட்பைப் பெற்றான்.

3. பணிவாழ்வு

இயேசுவின் பணிவாழ்வு எப்படிப்பட்டது எனில்  மத்தேயு 20:28 "மானிட மகன் தொண்டு ஏற்பதற்கு அல்ல, தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாக தன் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்"

🔵பணிவாழ்வின் அடையாளம், எளிமையும், தாழ்ச்சியும்

🟢தம் சீடர்கள் எத்தகைய பணியை முன்னெடுக்க வேண்டும் என்பதை தம் செயல்கள் வழி அறிவுறுத்தினார்.

யோவான் 13:5 "ஒரு குவளையில் தண்ணீர் எடுத்து, சீடர்களுடைய காலடிகளைக் கழுவி, இடுப்பில் கட்டியிருந்த துண்டால் துடைக்கத் தொடங்கினார்" இந்தச் செயல் யூத மரபில் வீட்டிற்கு வரும் சிறப்பு விருந்தினர்கள், கால்களை அடிமைகளை அல்லது வேலையாட்களை வைத்து கழுவுதல் விருந்தினர்களுக்குக் கொடுக்கும் மரியாதையாகக் கருதப்பட்டது.

🔴இயேசு ஒரு அடிமையாக தன் பணியைச் செய்தார்.

🟣இத்தகையப் பணியைச் செய்ய உயர்ந்தவன், தாழ்ந்தவன், நான் உயர் பதவியில் இருக்கிறேன், நான் கற்றவன் என்ற ஆணவ வாயை அறுத்து எளிய மனநிலையே பணி வாழ்வுக்கு உகந்தது என்று அறிவுறுத்தினார்.

🟡இயேசுவோடு பயணித்த சீடர்கள், இயேசுவையும், இயேசுவின் பணியையும் சரியாகப் புரியாமல், தங்களுக்குள் யார் பெரியவர், யார் வலப்புறம், இடப்புறம் அமர்வது என்ற யூகங்களுக்குள் புதையுண்டு கிடந்த போது இயேசு புதிய பாடம் கற்றுக் கொடுத்தார் பாதம் கழுவுதல் வழியாக

🔵கிறிஸ்து, கிறிஸ்தவம் என்றாலே பணிதான். சொல்லித்திரிவதோ, விளம்பரப்படுத்துவதோ அல்ல. மாறாக பணிவோடு பணியாற்ற பயணிப்பது கிறிஸ்தவம்.

🟢இயேசு நமக்குச் சுட்டிக் காட்டிய பணி கிறிஸ்தவம் இன்று எப்படி சிதைந்து கிடக்கிறது. அடிப்படைவாதமாக, அதிகாரமாக அடையாளங்களை முன்னிலைப்படுத்துவதாக சிதைந்து திரிந்து கிடக்கிறது.

🔴இயேசுவின் பணிவாழ்வும், இயேசுவின் இலட்சிய தெளிவும் நம்மில் நிலை பெற மன்றாடுவோம்.

🟣இயேசு இந்தப் பணிகளைச் செய்யும் முன், இரவெல்லாம் தனிமையில் கருக்கலோடு செபித்தார். அப்பா அனுபவம் பெற்றார் லாசரை உயிர்ப்பிக்கும் முன் கூட

யோவான் 11:42 "தந்தையே என் வேண்டுதலுக்குச் செவிசாய்த்ததற்காக உமக்கு நன்றி கூறுகின்றேன்" என்றார். இது இயேசுவின் அப்பா அனுபவம்.

🟡சீடர்கள் அவரின் நிலை பெற பணிந்தார். சீடர்களை அழைத்து அவர்களுக்கு வழங்கிய முதல் அறிவுரை மாற்கு 3:14 "தம்மோடு இருக்கவும்" என்பதுதான், ஏன் அவரோடு இருக்க வேண்டும்?

யோவான் 15:5 "ஒருவர் என்னுடனும், நான் அவருடனும் இணைந்து இருந்தால் அவர் மிகுந்த கனிதருவார்".

🔵மிகுந்த கனிதர, வாழ்வு அர்த்தமுள்ளதாக, பணிகள் பண்பட, வளம் பெற அவரோடு இணைவது அவசியம்.

🟣எனவே இந்த நாளில் உலகம் முழுவதும் பணியாற்றும் குருக்கள், ஆயர்கள், திருத்தந்தைக்காக மன்றாடுவோம். இயேசுவின் பணியை முன்னெடுக்கவும், சாட்சிய வாழ்வு வாழவும் வர வேண்டுவோம்! 

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.

👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋

தேனருவி மீடியா

http://youtube.com/c/thenaruvimedia

Subscribe பண்ணுங்க.*

No comments:

Post a Comment