Tuesday, March 26, 2024

புனித வெள்ளி மறையுரை -29.03.2024.

 👉 இறைச் சிந்தனை 

தேனருவி மீடியா

புனித வெள்ளி

29.03.2024

எசாயா 52 : 13 - 53 : 12,

எபிரேயர் 4 : 14 - 16, 5:7 - 9,

யோவான் 18: 1 - 19:42 .

அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.

தியாக பலியாய் கிறிஸ்து

🔴உலக வரலாற்றில் பலர், தங்களுடைய உயிரை, மக்களுக்காக, தேசத்திற்காக, தியாகம் செய்துள்ளனர். ஆனால் எந்த மனிதருடைய அல்லது எந்த தலைவர்களுடைய இரத்தமும், மக்களின் பாவக்கறைகளை கழுவியதாக வரலாறு இல்லை.

🔴ஆனால் ஆண்டவர் இயேசுவின் இரத்தமே மக்களை மீட்பதற்காய் சிந்தப்பட்ட இரத்தம்.

மத்தேயு 26:28 "பலருடைய பாவ மன்னிப்புக்காகச் சிந்தப்படும் இரத்தம்" என்று நற்செய்தியாளர் மத்தேயும், உரோமையர் 5:9 "இப்போது நாம் கிறிஸ்துவின் இரத்தத்தினால் கடவுளுக்கு ஏற்புடையவராகி, அவர் வழியாய் தண்டனையிலிருந்து தப்பி மீட்புப்பெறுவோம்" என்று தூய பவுலும் எடுத்துரைக்கின்றனர்.

🔴பிறருக்காய் பலியாய் தன்னை இழப்பதே கிறிஸ்தவம் நல்லாயன் இயேசு, அவரின் மக்களாகிய நாம் நிறைவாழ்வு பெறும் பொருட்டு வந்தார்.

யோவான் 10:10 "நான் ஆடுகள் வாழ்வை பெறும் பொருட்டு அதுவும் நிறைவாக பெறும் பொருட்டு வந்துள்ளேன்" என்றார்.

🔴நல்ல ஆயன் தன் ஆடுகளுக்காக தன் உயிரைக் கொடுப்பதைப் போல், ஆண்டவர் இயேசுவும் தன் உயிரை தியாக பலியாக்கி நம்மை மீட்டார். அவ்வாறு நம்மை மீட்க இயேசு பலியாகிய நாள் தான் புனித வெள்ளி. இந்த நாள் இயேசுவின் பாடு, மரணம் இவற்றை எண்ணி கண்ணீர் வடிப்பதற்கு அல்ல மாறாக, அவரின் மதிப்பீடுகளை வாழ்வாக்க அழைக்கப்படுகின்றோம்.

நிகழ்வு

1980 - ஆம் ஆண்டு, சிங்கள மற்றும் விடுதலை புலிகளுக்கான போர் நடைபெற்ற நாட்கள். தமிழீழ விடுதலை புலிகளின் பல நூறு குடும்பங்கள் புலம்பெயர்ந்து காட்டுப்பாதை வழியாக இரவு நேரத்தில் சென்று கொண்டிருந்தனர். சற்றுத் தொலைவில் சிங்கள இராணுவ வீரர்கள் அவ்வழியே வந்தாா்கள். எல்லாரும் அமைதியாய் புதருக்குள் சப்தமின்றி மறைந்தனர். இராணுவம் அருகில் நெருங்கும்போது, குழந்தை ஒன்று அழுதது. இந்தக் குழந்தை அழுகுரல் விடுதலைப்புலி மக்களை இராணுவத்திடம் காட்டி கொடுத்துவிடும். கொள்கைக்காய், விடுதலைக்காய் போராடும் பல நூறு பேர் மாண்டுபோவர். எனவே அக்குழந்தையின் தாய், அழும் குழந்தையின் வாயில் தன் கைகளை வைத்து அடைத்தார். சற்று நேரத்தில் குழந்தை அமைதியானது. ராணுவ வீரர்கள் அவர்களை கடந்து சென்றபின், அத்தாய் தன் குழந்தையைப் பார்த்த போது குழந்தை இறந்திருந்தது. தன் இனத்தை காக்க தன் இலட்சியத்தை அடைய, தன் தேசத்திற்காய் தன் பிஞ்சு குழந்தையை, தியாக வேள்வியாக்கிய நிகழ்வு இது.

இன்றைய நாள் இதை விட கொடுமையான ஒன்றை நமக்கு சுட்டி நிற்கிறது. மானிடர் நாம் தவறுகள் செய்து, கீழ்ப்படியாமல், பாவத்தில் திழைக்க நம்மை சாவிலிருந்து மீட்டு வாழ்வு தர தந்தை கடவுள் தன் ஒரே மகனாகிய கிறிஸ்துவின் உயர்மதிப்புள்ள இரத்தம் சிந்தப்பட்ட நாள்.

உலகின் எல்லாச் சமயங்களிலும், அவர்களின் கடவுளுக்காய் மக்கள் தங்களை வருத்துவர். கடவுளுக்காக இரத்தம் சிந்துவர். ஆனால் நம் ஆண்டவர் இயேசு பிள்ளைகள் நமக்காய் துன்புற்று, நொறுக்கப்பட்டு, சிலுவையில் பாவ உரு ஏற்று, பலியான நாள்.

🔴நாம் வாழ தெய்வம் தன்னைப் பலியாக்கிய நாள் தியாகமாய் ஒப்புக்கொடுத்த நாள்.

ஏன் தியாகப் பலியானார் ?

1. நமது செயல்பாடுகள் என்ற பதில் கிடைக்கும்

தொநூ 1:31 "கடவுள் தாம் உருவாக்கிய அனைத்தையும் நோக்கினார் அவை மிகவும் நன்றாக இருந்தன. என்று மகிழ்ந்த ஆண்டவரின் மகிழ்ச்சி நிலைக்கவில்லை காரணம் மனிதன்,

🔴மனிதன் - கடவுளைப்போல் மாற வேண்டும் என்ற பேராசை கொண்டான். வாழ்வு தந்தவரின் வாக்கை நிராகரித்து வாழ்வை எடுப்பவரின் வலையில் விழுந்தான். (தொநூ 3:5)

🔴மனிதன் கீழ்ப்படியாமையால் விலக்கப்பட்ட கனியை உண்டான் (தொநூ 3:6)

🔴மனிதன் - தன் சகோதரன் மீதே பொறாமை வளர்த்தான். பொறாமை கடுஞ்சினமாக மாறியது (தொநூ4:8) கடுஞ்சினம் சூழ்ச்சியாக  மாறியது (தொநூ 4:8) சூழ்ச்சி - கொலையாக மாறியது (தொநூ 4:8)

🔴மனிதன் ஒழுக்க கேட்டிற்கு உள்ளானான். நோவா வழி எச்சரித்தார் (தொநூ 6 - ஆம் அதிகாரம்)

🔴மனிதன் - தற்பெருமைப் பாராட்டினான், அவர்கள் பெயர், புகழ் நிலைக்க பாபேல் கோபுரம் கட்டினர் (தொநூ 11) பிற வழிபாடு என்று ஆண்டவரின் அன்புக்கு எதிராய் தவறுகள் செய்து தங்களைக் கடவுளின் அன்பிலிருந்து பிரித்தனர். இப்போது தொநூ 6:6 "மண்ணில் மனிதரை உருவாக்கியதற்காக ஆண்டவர் மனம் வருந்தினார்" என்று திருமறை அறிவுறுத்துகிறது.

மானுடர்களின் தீய வழியைக் கண்ணுற்ற இறைமகன் இயேசு, அவர்களை மீட்க, தன்னை தியாகப்பலியாய் மாற்ற வேண்டியிருந்தது.

2. பழைய ஏற்பாட்டு காலத்தில் லேவியராகமம் 16 - ஆம் அதிகாரத்தில் கூறப்படுவது போல், இஸ்ரயேல் மக்கள் உயிரோடிருக்கும் ஆட்டுக் கிடாயை கொண்டு வந்து, அவற்றின் மீது கைகளை நீட்டி எல்லா பாவங்களையும் அறிக்கையிடுவார். பின்னர் அது பாலை நிலத்திற்கு அனுப்பப்படும். அந்த வெள்ளாட்டுக் கிடாய் அவர்களின் பாவங்களைச் சுமந்து செல்லும் அதுபோல

புதிய ஏற்பாட்டில் இயேசு பாவத்தைச் சுமக்கும், போக்கு ஆடாக வந்து, பலியாகி, பாவத்தளைகளை அறுத்தார்.

3.விடுதலைப்பயணம் 11 மற்றும் 12 ஆம் அதிகாரத்தில் கூறப்படுவதுபோல், இஸ்ரயேல் மக்கள் அடிமைத்தனத்திலிருந்து விடுபட எகிப்தியரின் தலைச்சன் பிள்ளைகள் கொல்லப்பட்டன. இஸ்ரயேல் மக்களின் குடும்பங்களின் வாயில் நிலைகளில் செம்மறி அல்லது வெள்ளாடு இவற்றின் இரத்தம் தெளிக்கப்பட வேண்டும். ஆண்டவரின் தூதர் இரத்தத்தை நிலவாயிலில் கண்டால் கடந்து போவார். இஸ்ரயேலருக்கு நிலைவாயிலில் தெளிக்கப்பட்ட இரத்தம், வாழ்வின் அடையாளமாயிற்று.

விப 12:3 "இரத்தம் நீங்கள் இருக்கும் வீடுகளில் உங்களுக்கு அடையாளமாக இருக்கும். நான் இரத்தத்தைக் கண்டு உங்களைக் கடந்து செல்வேன்"  இரத்தம் மீட்பின் அடையாளமாயிற்று இஸ்ரயேலருக்கு, புதிய ஏற்பாட்டில் இயேசுவின் விலாவிலிருந்து பாய்ந்த இரத்தம் நாம் பாவத்திலிருந்து கடந்து வர, வாழ்வு பெற உதவியது.

1பேதுரு 1:19 "மாசு மறுவற்ற ஆட்டுக்குட்டியைப் போன்ற கிறிஸ்துவின் உயர் மதிப்புள்ள இரத்தமாகும்" நமது மீட்பின் அடையாளமாய் அமைந்தது.

ஆனால் மனிதர் நாம் பல நேரங்களில் இதை உணர்வது இல்லை. உணர வேண்டும் என்று முயல்வதும் இல்லை. ஆனால் தந்தை கடவுள் நாம் பாவ நிலையிலிருந்து கடந்து வந்து, புது வாழ்வு பெற தன் மகன் கிறிஸ்துவை பாவ நிலை ஏற்கச் செய்தார். 

2கொரி 5:21 "நாம் கிறிஸ்து வழியாகத் தமக்கு ஏற்புடையவராகுமாறு கடவுள் பாவமறியாத அவரைப் பாவ நிலை ஏற்கச் செய்தார்" இறைமகன் இயேசு பாவ உரு ஏற்று தியாக பலியாக ஒப்புக் கொடுத்தபோது எப்படி இருந்தாரெனில் எரேமியா 11:19 "வெட்டுவதற்கு கொண்டுச் செல்லப்படும், சாந்தமான செம்மறிபோல் இருந்தேன்" என்று விளக்கப்படுகிறது.

ஆண்டவர் இயேசு தன்னை நமக்காக பாவம் போக்கும் தியாக பலியாக ஒப்புக் கொடுத்திருக்கிறார். இதனை இறைவாக்கினர் எசாயா விவரிக்கும் போது

1. அவர் நம் குற்றங்களுக்காக காயமடைந்தார் (எசாயா 53:5)

2. நமக்கு நிறை வாழ்வை தர அவர் தண்டனை ஏற்றார் (எசாயா 53:5)

3. நம் தீச்செயல்களை தாமே ஏற்றுக் கொண்டார் (எசாயா 53:6)

4.வெட்டுவதற்குக் கொண்டுச் செல்லப்படும் செம்மறிப்போல் நடந்தார் (எசாயா 53:7)

5.அவ்வாறு கொண்டு செல்லும் போது பார்ப்பதற்கேற்ற தோற்றம் இல்லை. உருக்குலைந்து காணப்பட்டார் (எசாயா 53:2)

6. மக்களால் புறக்கணிக்கப்பட்டு இகழப்பட்டார் (எசாயா 53:3)

நமக்காய் இத்தனைத் துன்பங்களை தியாகச் செம்மறி ஏற்றுக் கொண்டது.

இன்றைய வழிபாடு நம்மை சுய ஆய்வற்கு இட்டுச் செல்லட்டும்.

🔴"உமக்கு நாங்கள் ஆறுதல் அளிப்போம் ஆண்டவரே" என்று அழுது, புலம்பும் நாம், நம்மோடு வாழும் மக்களின் வேதனை, துன்பங்களைக் கண்டு ஆறுதல் வழங்குகிறோமா?

🔴பொறுத்தருளும் கர்த்தாவே உமது சனத்தின் பாவங்களை ஏற்று பரிதவித்து பாடும் நாம், பிறர் நமக்கு எதிராகச் செய்யும் சிறு தவறுகளை பொறுக்கும் மனநிலையில் வாழ்கிறோமா?

🔴ஆண்டவருக்காய் என்னையே இழப்பேன் என்று கூறும் நாம் அடுத்தவருக்காய், சமூகத்திற்காய், தேவையில் இருப்போருக்காய் சிறு துரும்பைக் கூட இழக்க முன்வருவதில்லையே!

🔴தன்னை நேசிப்பது போல் பிறரை நேசிக்க சொன்ன ஆண்டவர் இயேசுவின் தியாகப் பலியில் கலந்து கொள்ளும் நாம், பிறரை முழு மனதுடன் ஏற்கும், நேசிக்கும் உளப்பாங்கு கொண்டிருக்கிறோமா?

🔴சென்ற இடமெல்லாம் நன்மையை மட்டுமே செய்து,  பிறருக்கு வாழ்வு வழங்கிய இயேசுவைப் போல் நம் நற்செயல்களால் இயேசுவின் பிள்ளைகள் என்பதை உலகறியச் செய்கிறோமா?

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அருட்பணி. ஜெரால்டு ஜெஸ்டின் குழித்துறை மறைமாவட்டம்.

👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋

தேனருவி மீடியா

http://youtube.com/c/thenaruvimedia

Subscribe பண்ணுங்க.*

No comments:

Post a Comment